மதுரை மேல மடை பகுதியில் வண்டியூர் கண்மாய் கரையை உடைத்து அதனை சமப்படுத்தி தொடங்கப்பட்டுள்ள பாலம் கட்டும் பணி. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி | 
தமிழகம்

மேம்பால பணிக்காக நெடுஞ்சாலை துறை அத்துமீறல் - மதுரை வண்டியூர் கண்மாய் கரைகள் அழிப்பு

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: சென்னையில் நீர்நிலைகள், அதன் வழித்தடங்கள் அழிவால் மழை வெள்ளத்தில் குடியிருப்புகள் மூழ்கிய துயரம் மறைவதற்குள் மதுரையில் வண்டியூர் கண்மாய் கரைகளை அழித்து 2 கி.மீ. தொலைவுக்கு மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாநகரின் பிரதான குடிநீர் ஆதாரமாகவும், மழைவெள்ள நீரை தேக்கி வைக்கும் மிகப்பெரிய நீர் தேக்கமாகவும் வண்டியூர் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் 400 ஏக்கரில் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இந்தக் கண்மாயில் தண்ணீர் இல்லாமல் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து அண்ணாநகர், கே.கே.நகர், கோமதிபுரம், மேலமடை, மானகிரி, தாசில்தார் நகர், சிவசக்தி நகர், யாகப்பா நகர், ஆவின் நகர், சதாசிவ நகர் மற்றும் வண்டியூர் பகுதிகளில் இருந்த ஆழ்துளைக் கிணறுகள் வறண்டன.

சொந்த வீடுகள், வாடகை வீடுகளில் வசித்த மக்கள் குடியிருப்புகளை காலி செய்து வேறு பகுதிகளுக்குச் சென்ற நிகழ்வுகளும் நடந்தன. கடந்த 4 ஆண்டுகளாக ஓரளவு கண்மாயில் தண்ணீர் நிற்பதால் மக்கள் குடிநீர் பிரச்சினையின்றி நிம்மதியாக வசிக்கின்றனர். இந்தக் கண்மாயால் மதுரையின் வடக்குப் பகுதி வார்டுகளுடைய நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது. ஆனாலும், இந்த கண்மாயைப் பராமரிக்க பொதுப்பணித் துறையும், மாநகராட்சியும் ஆர்வம் காட்டவில்லை. வண்டியூர் கண்மாயை ஆழப் படுத்த நடவடிக்கை எடுக்காததால் முழுமையாக நிரம்பாமல் கண்மாய்க்கு வரக்கூடிய தண்ணீர் வைகை ஆற்றில் கலக்கிறது.

கண்மாயின் கரையோரப் பகுதிகளில் மட்டுமே ஆழம் அதிகம் உள்ளது. மையப்பகுதி மேட்டுப் பகுதியாகவே உள்ளது. கண்மாயின் நாலாபுறமும் ஏற்கெனவே தனியார் ஆக்கிர மிப்புகள் அதிகம் உள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்றா மலே, ஆழப்படுத்தாமலே தற்போது கண்மாயை அழகுபடுத்தி சுற்றுலாத் தலமாக்கும் திட்டம் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படுகிறது. அதனால், இந்தத் திட்டமும் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் வைகை ஆற்றில் செலவிட்ட தொகையைப் போலவே விரயமாக வாய்ப்புள்ளது.

இந்நிலையில், இந்தக் கண்மாய் கரை வழியாக மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகே அண்ணா பேருந்து நிலையம் முன்பிருந்து சிவகங்கை சாலையில் கோமதிபுரம் தனியார் பெட்ரோல் நிலையம் வரை ரூ.150.28 கோடியில் 2.1 கி.மீ., தூரத்துக்கு மேம்பாலம் அமைக்கப்படுகிறது. பாலம் கட்டுவதற்காக தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றத் தயங்கிய நெடுஞ்சாலைத் துறை, மேலமடை சிக்னல் பகுதியில் இருந்து சிவகங்கை சாலையில் அரை கி.மீ., தூரத்துக்கு வண்டியூர் கண்மாய்க்கு அரண் போல் இருந்த கரைகளை உடைத்துச் சமப்படுத்தி பாலம் அமைக்கும் பணியை தொடங்கியிருக்கிறது.

இதற்காக வண்டியூர் கண்மாய், இந்தச் சாலையில் 30 அடிக்கு மேலான கரை, நீர்பிடிப்புப் பகுதிகளை மண்ணைக் கொண்டு கொட்டி சமப்படுத்தும் பணி நடக்கிறது. நீர் நிலைப் பகுதிகளை அரசு வளர்ச்சி திட்டப் பணிகளுக்காக கையகப்படுத்தக் கூடாது என்றும், நீர் நிலைப்பகுதிகளைப் பாதுகாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும், பசுமை தீர்ப்பாயமும் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளன. சென்னை வெள்ளம், அதைத் தொடர்ந்து திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்ட துயரச் சம்பவங்கள் அகல்வதற்குள் மதுரையில் கண்மாய் கரைகளை பகிரங்கமாக உடைத்து அதை ஆக்கிரமித்து பாலம் கட்டும் பணி தொடங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த அத்துமீறலை மாவட்ட நிர்வாகமும் கண்டும் காணாமல் இருப்பதால் மதுரையில் நீர் நிலைகளை எந்தளவுக்கு அரசு நிர்வாகம் பாதுகாக்கிறது என்பதற்கு இந்த கண்மாய் கரை உடைப்பே சாட்சியம். யாகப்பா நகர் மேற்குக் குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர் இருளாண்டி கூறுகையில், ‘‘வண்டியூர் கண்மாய், செல்லூர், மாடக்குளம் உட்பட நகரின் 6 கண்மாய்களை ஆழப்படுத்த வேண்டும், கழிவு நீர் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 2018-ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்னும் நடக்கிறது.

கண்மாயை ஆழப்படுத்தாமல் அலட்சியம் செய்து வந்த அரசு நிர்வாகம், தற்போது பாலத்துக்காக வண்டியூர் கண்மாய் கரைகளை அழிப்பது எந்த விதத்தில் நியாயம். கொள்ளளவு அதிகரித்தால் மட்டுமே நிலத்தடி நீர் ஆதாரம் பெருகும். ஆனால், கொள்ளளவை அதிகரிக்கவும், கண்மாய் கரைகளை பலப்படுத்தவும், ஆழப்படுத்தவும் எந்த நடவடிக்கையும் இல்லை,’’ என்றார். நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கண்மாய் கரையில் மேம்பாலத்தின் தூண்களை மட்டுமே அமைக்கிறோம். இப்பணிகள் முடிந்ததும், கண்மாய் கரையில் பிரம்மாண்ட சுவர் எழுப்பி பாதுகாப்பு அரண் அமைக்கப்பட உள்ளது’’ என்றார்.

SCROLL FOR NEXT