விருதுநகர்: மழை வெள்ளத்தில் மக்கள் தவிக்கிறார்கள். ஆனால், முதல்வர் ஸ்டாலின் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்துக்காக டெல்லி சென்றுள்ளார், என பாஜக மாநில தலைவர் குற்றம் சாட்டினார்.
விருதுநகரில் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: அரிசி, பருப்பு, எண்ணெய், சோப் போன்ற 16 வகையான அத்தியாவசிய பொருட்கள் கொண்ட தொகுப்பு 1.000 பேருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாளை பல்வேறு மாவட்டங் களிலிருந்தும் இதுபோன்ற நிவாரண உதவிகள் அனுப்பி வைக்கப்படும். அடுத்த 3, 4 நாட்கள் தொடர்ந்து நிவா ரணம் வழங்குவதில் கவனம் செலுத்துவோம். மழை வெள்ளத்தில் மக்கள் தவிக்கிறார்கள். ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்துக்காக டெல்லி செல்வது ஏன்? ஒரு வாரம் இந்தக் கூட்டத்தை தள்ளிவைக்க முடியாதா? டெல்லியில் ‘இண்டியா’ கூட்டணி சந்திப்புதான் முக்கியமா? இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல் வேலிக்கு விருதுநகர் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை கொடி யசைத்து அண்ணாமலை நேற்று அனுப்பிவைத்தார். அப்போது பாஜக கிழக்கு மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
முதல்வர் டெல்லி பயணம்: வானதி சீனிவாசன் கண்டனம் - பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவுமான வானதிசீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென் மாவட்டங்களில் பெய்த பெரும் மழையால் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 2004-ம் ஆண்டு இறுதியில் ஏற்பட்ட சுனாமி போல, பெரு மழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் பேரழிவை சந்தித்துள்ளன. மழையில் நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள், கிராம சாலைகள் பலத்த சேதமடைந்ததால் இம்மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகள், மற்ற மாவட்டங்களில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளன. பல கிராமங்களில் நிலைமை என்ன என்பதை அறிய முடியாத அளவுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது போன்ற பேரழிவை தென் மாவட்டங்கள் இதுவரை சந்தித்திராத நிலையில், மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க வேண்டிய தமிழக முதல்வர் ஸ்டாலின், ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றுள்ளார். மக்கள் துயரத்தில் இருக்கும்போது, அரசின் உதவி தேவைப்படும் நிலையில்இருக்கும்போது, ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் களத்தில் இருக்க வேண்டும். முதல்வரே நேரில் அதிகாரிகளுக்குஉத்தரவிடும்போது பணிகள் வேகமெடுக்கும். ஆனால், அரசியல்தான் முக்கியம்.கூட்டணி பேச்சு தான் முக்கியம் என இண்டியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் டெல்லி சென்று விட்டார். இது கடும் கண்டனத்திற்குரியது. முதல்வர் உடனடியாக சென்னை திரும்பி, பாதிக்கப்பட்ட தென் மாவட்ட பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு மீட்பு, நிவாரணப் பணிகளை முடுக்கிவிட வேண்டும். பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். பயிர்கள் பாதிப்பு, கால்நடைகள் இழப்புக்கு தனியாக நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.