விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் மழையால் அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி பகுதிகளில் நெல், மக்காச்சோளம், பருத்தி, வெங்காயம், நிலக்கடலை போன்ற பயிர்கள் முற்றிலுமாக நீரில் மூழ்கின. இதுகுறித்து, காரியாபட்டி அருகே உள்ள தேனூரைச் சேர்ந்த விவசாயிகள் செல்வக்குமார், ஆண்டி ஆகியோர் கூறுகையில், காரியாபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100 ஏக்கரில் வெங்காயமும், 225 ஏக்கரில் நெற்பயிரிலும், சுமார் 100 ஏக்கரில் கடலை யும் சாகுபடி செய்துள்ளோம்.
தொடர் மழையால் பயிர்கள் அனைத்தும் முழுவதுமாக தண் ணீரில் மூழ்கியுள்ளன. வெங்காய பயிருக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். 40 முதல் 50 நாள் பயிரான வெங்காயம் நல்ல விளைச்சல் இருந்தால் ஏக்கருக்கு சுமார் 3 டன் வரை மகசூல் கிடைக்கும். ஆனால், தற்போது வெங்காய பயிர் முழுவதும் நீரில் மூழ்கி அழுகிவிட்டது. அதுமட்டுமின்றி, நெல், கடலை போன்ற பயிர்களும் முழுவதுமாக மழைநீரில் மூழ்கியுள்ளன. இதேபோன்று, அருப்புக்கோட்டை, காரியாபட்டி சுற்று வட்டாரப் பகுதிளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிர் நீரில் மூழ்கியுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து வேளாண்துறை அலுவலர்கள் கூறுகையில், மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்ததையொட்டி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்படி வேளாண்மைத் துறை மூலம் அனைத்து வட்டாரங்களிலும் வேளாண் இணை இயக்குநர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்), வேளாண் துணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு பயிர் சேதம் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதாகத் தெரிவித்தனர்.