ஓடாத்தூர் அருகே கிருதுமால் நதி நீரை ஆபத்தான முறையில் கடந்து பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள். 
தமிழகம்

திருப்புவனம் அருகே 16 கிராமங்கள் துண்டிப்பு: ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் மாணவர்கள்

இ.ஜெகநாதன்

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கிருதுமால் நதியில் தண்ணீர் செல்வதால் 16 கிராமங்களுக்கு பேருந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் ஆற்றுநீரில் ஆபத்தான முறையில் பள்ளி மாணவர்கள் கடந்து செல்கின்றனர். திருப்புவனம் அருகே ஓடாத்தூர், வல்லாரேந்தல், நாச்சியாரேந்தல், சிறுவனூர், எஸ்.வாகைக்குளம், நண்டுகாச்சி, பிரான்குளம், அருணகிரி மற்றும் விருதுநகர் மாவட்டம் சேந்தநதி, ரெட்டகுளம், ஆலாத்தூர், திருவளர்நல்லூர் உள்ளிட்ட 16 கிராமங்கள் கிருதுமால் நதியின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளன. அந்தக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மருத்துவம், தொழில், பொருட்கள் வாங்குவது உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் வட பகுதியில் உள்ள பழையனூருக்கு வந்து செல்கின்றனர்.

அதேபோல் அப்பகுதி மாணவர்கள் பழையனூர் அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர். இதற்காக பழையனூரில் இருந்து விருதுநகர் மாவட்டம் முக்குளம் வரை சாலை அமைக்கப்பட்டது. பழையனூர், ஓடாத்தூர் இடையே குறுக்கே செல்லும் கிருதுமால் நதியில் தரைப்பாலம் உள்ளது. எனினும் நதியில் தண்ணீர் செல்லும் காலங்களில் தரைப்பாலம் மூழ்கி, 16 கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்படும். இதையடுத்து அப்பகுதி மக்கள் உயர்மட்ட பாலம் கேட்டு பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை (நபார்டு கிராமச்சாலைகள்) சார்பில் கடந்த ஜூலை 16-ம் தேதி ரூ.3.57 கோடியில் உயர்மட்ட பாலம் அமைக்க அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினார்.

5 மாதங்களாகியும் தூண்கள்கூட அமைக்கவில்லை. பாலப்பணி மந்தமாக நடந்து வந்த நிலையில், தற்போது தொடர் மழையால் கிருதுமால் நதியில் தண்ணீர் செல்கிறது. இதனால் ஓடாத்தூர் உள்ளிட்ட 16 கிராமங்களுக்கு நேற்று பேருந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கிருதுமால் நதியில் ஆபத்தான முறையில் கடந்து பழையனூரில் உள்ள பள்ளிக்குச் செல்கின்றனர். அவர்கள் பல கி.மீ. நடந்து செல்லும் நிலை உள்ளது.

இதுகுறித்து ஓடாத்தூர் கிராம மக்கள் கூறுகையில், ‘‘நதியில் தண்ணீர் செல்லும் காலங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு மிகவும் சிரமப்படுகிறோம். இன்னும் சில தினங்களில் வைகை ஆற்றில் இருந்து உபரிநீர் திறந்துவிட வாய்ப்புள்ளது. அப்போது கிருதுமால் நதியில் அதிகளவில் தண்ணீர் செல்லும். அப்போது யாரும் ஆற்றை கடக்க முடியாது. மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்படும். இதனால் மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச்செல்ல மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் பல ஆண்டுகள் போராட்டத்துக்கு பின்னர் உயர்மட்ட பாலம் கட்ட நடவடிக்கை எடுத்தனர். ஆனால், பாலப்பணி மிகவும் மந்தமாக நடைபெறுகிறது. இதே வேகத்தில் கட்டினால் 2 ஆண்டுகளில்கூட கட்ட முடியாது’’ என்று கூறினர்.

SCROLL FOR NEXT