நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பெண் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் எர்ணாபுரத்தைச் சேர்ந்த 30 வயது கர்ப்பிணி பெண் ஒருவர் நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கரோனா தொற்று பரிசோதனை உள்பட பல்வேறு கட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து அவர் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தனி வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.