தமிழகம்

ஆத்தூர் நீர்த்தேக்கம் நிரம்பியதால் குடகனாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

செய்திப்பிரிவு

திண்டுக்கல்: திண்டுக்கல் நகரின் குடிநீர் ஆதாரமான ஆத்தூர் நீர்த்தேக்கம் நிரம்பி மறுகால் பாய்கிறது. உபரி நீர் குடகனாற்றில் செல்வதால், கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொடைக்கானல் மலையடி வாரம் ஆத்தூர் அருகேயுள்ளது திண்டுக்கல் நகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆத்தூர் நீர்த் தேக்கம். இதன் மொத்த உயரம் 23.5 அடி. கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால், ஆத்தூர் நீர்த் தேக்கத்துக்கு நேற்று முன்தினம் முதல் நீர்வரத்து அதிகரித்தது.

இதையடுத்து, ஆத்தூர் நீர்த் தேக்கம் நேற்று அதன் முழுக் கொள்ளளவான 23.5 அடியை எட்டி மறுகால் பாய்கிறது. உபரி நீர் குடகனாறு ஆற்றில் செல்கிறது. இதனால், குடகனாறு ஆற்றின் கரையோர கிராமங்கள் எச்சரிக்கையுடன் இருக்க, பொதுப்பணித் துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக் கோட்டை அருகே அணைப்பட்டி யில் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பேரணை உள்ளது. தொடர் மழை காரணமாக, வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இத்துடன் மருதா நதி, மஞ்சளாறு ஆகிய நதிகளில் இருந்து வரும் நீரும் திண்டுக்கல் மாவட்ட பகுதியில் செல்லும் வைகை ஆற்றில் கலந்து, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இவை அனைத்தும் சேர்ந்து, அணைப்பட்டி பேரணை பகுதியில் 8,000 கன அடியாக வைகை ஆற்றில் சென்று கொண்டிருக்கிறது. இதையடுத்து, திண் டுக்கல் மாவட்டத்தில் உள்ள வைகை ஆற்றின் கரையோர கிராமங்களான அணைப்பட்டி, சித்தர்கள் நத்தம், நடகோட்டை, விளாம்பட்டி, மட்டப்பாறை, ராமராஜபுரம், கண்ணாபட்டி ஆகிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, பொது மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நிலக்கோட்டை வட்டாட்சியர் தனுஷ்கோடி தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள், நீர் வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து வைகை ஆற்றின் கரையோரப் பகுதிகளை கண் காணித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT