மானாமதுரை: தொடர் மழையால் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை ஆகிய பகுதிகளில் 260 ஏக்கரில் நெற்பயிர் சேதமடைந்தது.
சிவகங்கை அருகே பனையூரில் 100 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. அவை பால் பிடித்து சில வாரங்களில் அறுவடைக்கு தயாராக இருந் தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் பெய்த தொடர் மழையால் நெற் பயிர் முழுமையாக சாய்ந்து சேதமடைந்தது. 100 ஏக்கரும் முழுமையாக பாதிக்கப்பட்டதால் அப்பகுதி விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டது.
அதேபோல், மானாமதுரை அருகே கணபதியேந்தல் பகுதியில் தொடர் மழையால் 10 ஏக்கரில் நெற்பயிர் பாதிக்கப்பட்டது. திருப்புவனம் அருகே திருப்பாச்சேத்தி கண்மாய் நிரம்பியுள்ள நிலையில், உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் 150 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்ட நெல், வாழை, கரும்பு பயிர்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து தண்ணீர் தேங்கியிருப்பதால் பயிர்கள் அழுகி வருகின்றன.
இது குறித்து கணபதியேந்தல் விவசாயி சாத்தையா கூறுகையில், 4 ஏக்கரில் நெல் சாகுபடி செய்தேன். தொடர் மழையால் நெற்கதிர்கள் சாய்ந்தன. கதிர்கள் தண்ணீரில் சாய்ந்ததால் ஓரிரு நாட்களில் அழுகி, மீண்டும் முளைக்க தொடங்கிவிடும். ஏக்கருக்கு ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை செலவழித்தோம். பயிர் சேதத்தால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறினார்.