தமிழகம்

விளைநிலங்களை மனைகளாக்கி விற்றதால் வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள் @ குமரி

செய்திப்பிரிவு

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் இரு நாட்களாக கன மழை பெய்தது. அதிகபட்சமாக மயிலாடியில் 303 மிமீ., மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் கடந்த ஆண்டைவிட நடப்பாண்டு 103 சதவீதம் மழை அதிகமாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் மூலம் தெரிய வந்துள்ளது.

நேற்று முன்தினம் மாலை முதல் மழை இல்லாததால் பல இடங்களில் தேங்கிய தண்ணீர் வடிந்து விட்டது. ஆனால், விதிவிலக்காக நாகர்கோவில் புத்தேரி, வடசேரி, ஒழுகினசேரி, சுசீந்திரம், திருப்பதிசாரம் போன்ற பகுதிகளில் வீடுகளை சூழ்ந்த வெள்ளம் மழை குறைந்தும் இன்னும் வடியவில்லை. 3 நாட்கள் ஆனாலும் மழைநீர் வடிய வாய்ப்பில்லை என அங்கு வசிக்கும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

நாகர்கோவில் சக்தி கார்டன், மீனாட்சி கார்டன் உட்பட 20-க்கும் மேற்பட்ட பகுதிகளில் இதேநிலை தான் . விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக்கியது தான் இதற்கு காரணம். பாசன குளத்தின் கீழ் உள்ள ஏக்கர் கணக்கான நெல் வயல்களை மண்போட்டு நிரப்பி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு மனைகளாக மாற்றி ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் விற்பனை செய்துள்ளனர்.

இதவற்றில் குமரி மாவட்டம் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து பணி மாறுதல் மற்றும் ஓய்வுக் காலத்தை நிம்மதியாக கழிக்கும் பொருட்டு நூற்றுக் கணக்கானோர் இங்கு வந்து, மனை வாங்கி வீடுகட்டி குடிபெயர்ந்துள்ளனர். பல லட்சம் செலவு செய்து அடுக்கு மாடி கான்கிரீட் வீடுகள் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன. ஆனால், விளை நிலங்களில் கட்டியதன் விளைவாக ஒரு நாள் மழைக்கே தாக்குப் பிடிக்காமல் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து விட்டது.

குளத்தில் உடைப்பு ஏற்பட்டாலோ, மேல் பகுதியில் இருந்து வயல்களுக்கு தண்ணீர் வடிந்தாலோ இந்த குடியிருப்பு பகுதிகளுக்குள் தான் புகும் .பல லட்சம் ரூபாய் செலவழித்து கட்டிய வீடுகள் ஒரு நாள் மழைக்கே தாக்குப்பிடிக்காததால் அங்கு வசிப்பவர்கள் வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர்.

உணவுக்காக அரசு மற்றும் தொண்டு நிறுவனத்தினரின் உதவியை எதிர்பார்த்து அவர்கள் பரிதாபமாக காத்திருக் கின்றனர். தாழ்வான விளை நிலப் பகுதிகளை ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வீட்டு மனைகளாக்கி விற்கவும், இத்தகைய நிலங்களில் வீடு கட்டவும் அரசு கட்டுப்பாடுகளை கடுமையாக்கினால் மட்டுமே இதுபோன்ற அவலங்களை தவிர்க்க முடியும்.

SCROLL FOR NEXT