படங்கள்: எஸ்.கோமதி விநாயகம் 
தமிழகம்

கோவில்பட்டியில் வரலாறு காணாத மழை: கடந்த 24 மணி நேரத்தில் 49 செ.மீ. மழை பதிவு

எஸ்.கோமதி விநாயகம்

கோவில்பட்டி: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று அதிகாலை 2 மணியில் இருந்து மிதமாகவும், மதியம் ஒரு மணிக்கு மேல் கனமழையும் பெய்தது.

இதன் காரணமாக கோவில்பட்டியில் உள்ள அத்தை கொண்டான் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது. மறுகால் ஓடை வழியாக அதிகளவு தண்ணீர் சென்றதால் அதிலிருந்து தண்ணீர் வெளியேறி இளையரசனேந்தல் சாலையை மூழ்கடித்துச் சென்றது. இதன் காரணமாக இளையரசனேந்தல் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு இன்று அதிகாலை ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களால் பணிக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டது.

இதன் காரணமாக பேருந்துகள் சரியான நேரத்துக்கு பணிமனையில் இருந்து புறப்படுவதிலும் தாமதமானது. இதனால் பேருந்து நிலையத்தில் பயணிகள் காலை 7 மணி வரை பேருந்துகளுக்காக காத்திருந்தனர். இதில் பனிமலையிலிருந்து புறப்பட்ட ஒரு பேருந்து இளையரசனேந்தல் சாலையில் சென்ற மழை வெள்ளத்தில் சிக்கி பழுதாகி நின்றது.

இதற்கிடையே, திருநெல்வேலி, தூத்துக்குடியில் பெய்து வரும் கனமழை காரணமாக கோவில்பட்டி வழியாக சென்ற சென்னை தூத்துக்குடி முத்துநகர் விரைவு ரயில், நிஜாமுதீன் விரைவு ரயில் ஆகியவை கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். அதிகாலை 4 மணி அளவில் பயணிகள் இறக்கிவிடப்பட்டதால் அவர்கள் பரிதவித்தனர். தொடர்ந்து வட்டாட்சியர் லெனின், டிஎஸ்பி வெங்கடேஷ் தலைமையிலான அதிகாரிகள் விரைந்து வந்து அவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தனர்.

தொடர் மழை காரணமாக விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி அணையில் இருந்து வைப்பாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஏற்கனவே வைப்பாட்டில் அதிகளவு தண்ணீர் சென்று கொண்டிருந்த நிலையில் அணையில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடியது.

எட்டயபுரத்தில் பெய்த மழை காரணமாக அங்குள்ள சிறிய நீராவி தெப்பம் நிரம்பி மறுக்கால் பாய்ந்தது. இதனால் எட்டயபுரத்தில் இருந்து நாவலக்கம்பட்டி, வீரப்பட்டி கருப்பூர், மலைப்பட்டி செல்லும் சாலை மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும், சாலையிலும் அரிப்பு ஏற்பட்டது. எட்டயபுரம் பேரூராட்சி 9-வது வார்டுக்கு உட்பட்ட புலிமால் தெருவில் மணி, காளியம்மாள் ஆகியோரின் வீடுகள் இடிந்தன. மேலும் எட்டயபுரத்தில் உள்ள முக்கிய சாலைகளில் மலையை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

விளாத்திகுளம் அருகே வைப்பாற்று கரையில் உள்ள கமலாபுரம் ஊராட்சி சுப்பிரமணியபுரம் கிராமத்தில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. தகவல் அறிந்து அங்கு சென்ற காவல்துறை மற்றும் வருவாய்த்துறை உடனடியாக அங்குள்ள மக்களை மீட்டு விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தங்க வைத்துள்ளனர். விளாத்திகுளம் வைபாற்றில் நீண்ட வருடங்களுக்கு பின்பு இரு கரைகளையும் தொட்ட நிலையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக மீரான் பாளையம் தெருவில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. விளாத்திகுளம் அருகே உள்ள பூசனூர், அயன்செங்கல்படை, கே.துரைச்சாமிபுரம், ஓ.லட்சுமிநாராயணபுரம், நூத்தலக்கரை, நாகலாபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மழை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது இதனால் கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்மழை காரணமாக ஓட்டப்பிடாரம் பெரிய கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது. இதனால் ஓட்டப்பிடாரத்தில் இருந்து கோவில்பட்டி செல்லும் சாலை துண்டிக்கப்பட்டது. மேலும், பசுவந்தனை, வெள்ளாரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்லும் சாலையும் துண்டிக்கப்பட்டதால் கிராம மக்கள் சிரமம் அடைந்தனர். கொல்லம்பரும்பு, பட்டினமருதூர் ஆகிய கிராமங்களில் உள்ள கண்மாய்கள் நிரம்பி கரைகள் உடைந்ததால் தண்ணீர் வெளியேறியது. இதையடுத்து அங்கு வந்த வருவாய் துறையினர் தண்ணீர் ஊருக்குள் புகுந்து விடாமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்தனர்.

மேலும், அங்குள்ள வீடுகளை மழை நீர் சூழ்ந்ததால் கிராம மக்களை பத்திரமாக வெளியேற்றி சமுதாய நலக்கூடங்களில் தங்க வைத்துள்ளனர். ஓட்டப்பிடாரத்தில் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன. கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய்த் துறையினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளையும், சேதமடைந்த வீடுகளையும் கணக்கெடுத்து வருகின்றனர். ஒட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட எப்போதும் என்றான் நீர்த்தேக்கம் ஏற்கெனவே நிரம்பி மறுகால் பாய்ந்து வந்தது. இதற்கிடையே நேற்று முதல் பெய்து வரும் மழை காரணமாக நீர்த்தேக்கத்துக்கு அதிக அளவு தண்ணீர் வரத்து ஏற்பட்டதால், மறுகால் பாயும் தண்ணீர் அளவும் உயர்ந்துள்ளது. இந்த தண்ணீர் மறுகால் ஓடையில் இருந்து வெளியேறி மதுரை - தூத்துக்குடி நான்கு வழி சாலையை சூழ்ந்துள்ளது.

இன்று (டிச.18)ப் காலை 6.30 மணி முதல் இன்று காலை 6.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் கோவில்பட்டி - 495 (மி.மீ. அளவில்), கயத்தாறு - 263, கடம்பூர் - 348, ஓட்டப்பிடாரம் - 356, வாஞ்சி மணியாச்சி - 240, வேடநத்தம் 267, கீழ அரசரடி - 344, விளாத்திகுளம் - 238 என மழை பதிவாகியுள்ளது.

வரலாறு காணாத மழைப்பொழிவு: “கோவில்பட்டியை பொருத்தவரை கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 49.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு அதிகபட்சம் என்று பார்த்தால் சுமார் 155 மி.மீ. மலையளவு பதிவாகி இருக்கும். 49.5 செ.மீ. மழையளவு என்பது காலை ஆறு முப்பது மணி வரை தான். அதன் பின்னர் இன்று முழுவதும் மழை நீடிக்கும். இதனால் மழையளவு பதிவு மிகவும் அதிகமாக வாய்ப்பு உள்ளது” என தனியார் வானிலை ஆர்வலர் ராஜா தெரிவித்தார்

SCROLL FOR NEXT