தென்காசி: தென்காசி மாவட்டத்தில் பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதயில் பெய்து வரும் கனமழையால் கடனாநதி, ராமநதி, சிற்றாறு, குண்டாறு, அனுமன்நதி, கருப்பாநதி ஆகியவற்றில் அதிகப்படியான நீர் செல்கிறது.
எனவே, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல வேண்டும். ஆறு, குளங்களில் நீர்வரத்து அதிகமாக வாய்ப்பு உள்ளதால் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் உரிய எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும். தேங்கி நிற்கும் மழை நீரின் அருகே உள்ள மின் கம்பங்களை தொடவோ, அருகில் செல்லவோ வேண்டாம்.
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் தண்ணீருக்குள் செல்ல வேண்டாம். இடி, மின்னல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் விவசாய தொழிலாளர்கள், கால்நடைகள் மேய்ப்பவர்கள் உள்ளட்ட யாரும் வெட்டவெளியில் நடக்க வேண்டாம். பாதுகாப்புக்காக மரங்களுக்கு கீழ் ஒதுங்க வேண்டாம். காய்ச்சிய குடிநீரை பருகி நோயில் இருந்து காத்துக்கொள்ள வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.