சென்னை: ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்க அண்ணா தொழிற்சங்க பேரவை உள்ளிட்ட 32 சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
இதுதொடர்பாக அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கப் பேரவை, பாமக, தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் தொழிற்சங்க நிர்வாகிகள் நேற்று சென்னையில் ஆலோசனை நடத்தினர். பின்னர் அண்ணா தொழிற்சங்க பேரவைச் செயலாளர் ஆர்.கமலகண்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் தற்போது ரூ.50 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்குகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் புதிய ஓட்டுநர், நடத்துநர் போக்குவரத்துத் துறையில் எடுக்கப்படாத காரணத்தால் கடும் ஆள் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் போதிய பேருந்துகள் இயக்க முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேநேரம், கடந்த 3 ஆண்டுகளில் தமிழக அரசு எந்த புதிய பேருந்தையும் வாங்கவில்லை.
போக்குவரத்துக் கழக ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன. ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை. தமிழக அரசு அடுத்த 21 நாட்களில் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். ஓய்வுபெற்ற பணியாளர்களுடைய பணப்பலன்கள் அனைத்தும் உடனடியாக கொடுக்கப்பட வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களின் நலன் காக்க அனைவரையும் உடனடியாக அரசு பணியாளராக மாற்ற வேண்டும்.
இதுபோன்ற எங்களுடைய கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை என்றால் அதிமுக, பாமக, நாம் தமிழர் மற்றும் தேமுதிக தொழிற்சங்கங்களை சேர்ந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் அனைவரும் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இதுதொடர்பாக கட்சி தலைமையிடம் உடனடியாக அனுமதி பெற்று, போக்குவரத்துத் துறைச் செயலரிடம் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்க இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.