சென்னை: உட்கட்சி விவகாரங்களை சமூக வலைதளங்களில் எழுதக் கூடாது என விசிக நிர்வாகிகளுக்கு கட்சித் தலைவர் திருமாவளவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:
விசிக சார்பில் வெல்லும் ஜனநாயகம் என்னும் மாநாடு டிச.29-ம் தேதி திருச்சி சிறுகனூரில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன. மாநாடு தொடர்பாக கட்சி நிர்வாகிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் வழங்கும் வகையில் சென்னை, வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் விசிக தலைவர் திருமாவளவன் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோரை நேற்று சந்தித்தார். இதில், துரை ரவிக்குமார் எம்பி. ஆளூர் ஷாநவாஸ் எம்எல்ஏ, துணை பொதுச்செயலாளர் வன்னியரசு உட்பட 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், மாநாடு நடைபெறும் திடல் வடிவமைப்பை கொண்டு நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். உட்கட்சி விவகாரங்களை சமூக வலைதளங்களில் எழுதக் கூடாது எனவும் இறுதியாக எச்சரிக்கை விடுப்பதாக தெரிவித்துள்ளார்.
மாநாட்டையொட்டி, சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் சமூகநீதி சுடர் ஏற்றப்பட்டு டிச.26, 27, 28 ஆகிய தேதிகளில் சென்னை - செங்கல்பட்டு, திண்டிவனம் - விழுப்புரம், உளுந்தூர்பேட்டை - தொழுதூர், பெரம்பலூர்- சிறுகனூர் ஆகிய இடங்களுக்கு திறந்தவெளி வாகனத்தில் கட்சித் தலைவர் திருமாவளவன் எடுத்துச் செல்லவிருக்கிறார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.