மயிலாடுதுறை: பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு பிராமணர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் 14-ம் ஆண்டு மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் மயிலாடுதுறையில் நேற்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் கோவை கணேசன் தலைமை வகித்து, சங்கக் கொடியை ஏற்றிவைத்தார். மாநிலஒருங்கிணைப்பாளர் பம்மல் ராமகிருஷ்ணன், மூத்த ஆலோசகர் அருண் ராமதாஸ், மாநில அமைப்புச் செயலாளர் சேகர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் சங்கர ராமநாதன் ஆண்டறிக்கையும், பொருளாளர் திருவெற்றியூர் ஜெயராமன் நிதிநிலை அறிக்கையும் வாசித்தனர்.
பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை தமிழகத்தில் உடனடியாக அமல்படுத்த வேண்டும். கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் உள்ளதுபோல, பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிராமண சமூகத்தினரின் முன்னேற்றத்துக்கு உதவி செய்ய தனி நல வாரியம் அமைக்க வேண்டும். டிஎன்பிஎஸ்சி தேர்வில் முற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான வயது வரம்பை 35-ஆக உயர்த்த வேண்டும். அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், நீதிமன்ற ஆலோசனைப்படி தக்கார் நியமனத்தில் பிராமணர் சமூகத்தினருக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நவோதயாபள்ளிகளை அமைக்க அனுமதி வழங்க வேண்டும். நீட் நுழைவுத் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்யும் முயற்சியைக் கைவிட வேண்டும். டெல்டா மாவட்டங்களில் உபரிமழைநீரை சேமிக்கும் வகையில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். மயிலாடுதுறை- தரங்கம்பாடி இடையே மீண்டும் ரயில் சேவை தொடங்க வேண்டும். மயிலாடுதுறை நகரில் புறவழிச்சாலை அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்தோர், பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக செயல்படும் சங்கக் கிளைகளுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
கூட்டத்தில், மாநிலச் செய லாளர் பலராமன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.