சென்னை: 552 தாழ்தள பேருந்துகளைத் தயாரிக்க உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கை: தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளை மேம்படுத்தும் வகையில் மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு 352 பேருந்துகள், கோயம்புத்தூர் போக்குவரத்து கழகத்துக்கு 100 பேருந்துகள், மதுரை போக்குவரத்துக் கழகத்துக்கு 100 பேருந்துகள் என மொத்தமாக 552 புதிய தாழ்தள நகர பேருந்துகளை கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டது.
முதல்வரின் உத்தரவுப்படி ரூ.500.97 கோடி மதிப்பீட்டில் ஜெர்மன் வங்கி (KfW) நிதி உதவியுடன் கொள்முதல் செய்யப்படும் இந்த பேருந்துகளைத் தயார் செய்வதற்கு உற்பத்தியாளர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் மக்களின் போக்குவரத்து சேவை மேம்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.