தமிழகம்

1,215 ரயில் நிலைய மேற்கூரைகளில் சூரிய ஒளி மின் உற்பத்தி

செய்திப்பிரிவு

சென்னை: நாடு முழுவதும் தற்போது வரை 1,215 ரயில் நிலையங்களில் மேற்கூரைகளில் சூரிய ஒளி மின்தகடுகள் நிறுவி, மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கார்பன் வெளியேற்றத்தை பூஜ்ஜியமாக்கும் வகையில், சூரிய ஒளி மின் உற்பத்தியில் தெற்கு ரயில்வே கவனம் செலுத்துகிறது. தெற்கு ரயில்வேயில் கடந்த ஆண்டில் மொத்தம் 5.07 மெகாவாட் திறன் கொண்ட சூரியஒளி மின் உற்பத்தி ஆலைகள் நிறுவப்பட்டன. இதன்மூலம், கடந்த ஆண்டில் 5.47 மில்லியன் யூனிட்கள் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டன. சுமார் ரூ.2.3 கோடி சேமிக்கப்பட்டது. தற்போது, சூரிய ஒளி மின் உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில் நிலையங்களில் மேற்கூரைகள், அலுவலகங்கள், பணிமனைகள், தொழிற்சாலைகளில் சூரிய ஒளி மின்தகடுகள் பொருத்தி, மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

6 கோட்டங்களில் 6 மெகாவாட்: தெற்கு ரயில்வேயில் சென்னை, மதுரை, திருச்சி, சேலம் உட்பட 6 கோட்டங்களில் 6 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் மின்சார தேவையை, இதன் வாயிலாக பூர்த்தி செய்கிறோம். நாடு முழுவதும் தற்போதுவரை 1,215 ரயில் நிலையங்களில் மேற்கூரைகளில் சூரியஒளி மின்தகடுகள் நிறுவப்பட்டுள்ளன. 2014-ம் ஆண்டு வரை, 150 ரயில் நிலையங்களில் மட்டுமே சூரிய ஒளி மின்சார தகடுகள் நிறுவப்பட்டிருந்தன. தற்போது, இந்த எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. இவ்வாறு தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT