ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆற்றில் குளித்த போது பாறையிலிருந்து தவறி விழுந்த முதுநிலைக் காவலர் உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே செவல்பட்டியைச் சேர்ந்தவர் டேவிட் சுதர்சனராஜா (38). இவர், விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் முது நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், இவர் தனது அண்ணன் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ராக்காச்சி அம்மன் கோயில் ஆற்றில் குளிப்பதற்காகச் சென்றார்.
அங்கு குளித்துக் கொண்டிருந்த போது, பாறையிலிருந்து தவறி விழுந்த டேவிட் சுதர்சன ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறையினர் டேவிட் சுதர்சன ராஜாவின் உடலை மீட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மம்சாபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.