சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்கிட தமிழக அரசு 1486 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் 24 லட்சத்து 25 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறுவர், என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மிக்ஜாம் புயல் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கு நிவாரணமாக 6000 ரூபாய் வழங்கும் பணியைச் சென்னை வேளச்சேரியில் துவக்கி வைத்தேன்.பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்கிட தமிழக அரசு 1486 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் 24 லட்சத்து 25 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறுவர்.மக்களின் துயர் நீக்க என்றும் மக்கள் பணியில் எனது பயணம் தொடரும்...!" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, மிக்ஜாம் புயல், கனமழை, வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனையடுத்து, சென்னையில் முழுமையாகவும், இதர 3 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட தாலுகாக்களில் உள்ள மக்களுக்கும் நியாயவிலை கடைகள் மூலம் ரூ.6,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் கடந்த 9-ம் தேதி அறிவித்தார். பயனாளிகள் பட்டியல் அடிப்படையில், நியாயவிலை கடை பணியாளர்கள் மூலம் கடந்த 14-ம் தேதி மாலை முதல் டோக்கன் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் புயல், வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட வேளச்சேரியின் அஷ்டலட்சுமி நகரில் பயனாளிகளுக்கு நிவாரணத் தொகையை வழங்கி, இப்பணியை முதல்வர் ஸ்டாலின் இன்று (டிச.17) தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், பெரியகருப்பன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முழுமையாக வாசிக்க > ரூ.6,000 வெள்ள நிவாரணம் வழங்கும் திட்டம்: வேளச்சேரியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்