தமிழகம்

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல்: தலைவராக ஜி.மோகனகிருஷ்ணன் தேர்வு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்துக்கு 7 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் தலைவராக ஜி.மோகனகிருஷ்ணன், செயலாளராக ஆர்.கிருஷ்ணகுமார், பொருளாளராக ஜி.ராஜேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள பாரம்பரியமிக்க வழக்கறிஞர்கள் சங்கமான எம்எச்ஏஏ வழக்கறிஞர் சங்கத்துக்கான தேர்தல் 7 ஆண்டுகளுக்குப் பிறகு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில்சங்கத் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர், நூலகர், 6 மூத்த செயற்குழு உறுப்பினர்கள், 5 இளம் செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 16 பதவிகளுக்கு 105 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலை நடத்தும் அலுவலராக மூத்த வழக்கறிஞர் கபீரை உயர் நீதிமன்றம் நியமித்திருந்தது.

சிஐஎஸ்எஃப் மற்றும் மாநில போலீஸாரின் ஐந்தடுக்கு பாதுகாப்பு வளையத்தில் நடத்தப்பட்ட இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதியான 4 ஆயிரத்து 752 வாக்காளர்களில், 3 ஆயிரத்து 476 பேர் வாக்களித்தனர். தலைவர் மற்றும் செயலர் ஆகிய பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1.30 மணி வரை நீடித்தது. மற்ற பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை தொடங்கி இரவு வரை நடந்தது.

இதில் எம்எச்ஏஏ வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராக ஜி.மோகனகிருஷ்ணன் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோல சங்கத்தின் செயலாளராக ஆர். கிருஷ்ணகுமார் 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த முறையும் இவர்கள் இருவருமே தலைவர், செயலாளராக பதவிவகித்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல சங்கத்தின் துணைத் தலைவராக எஸ்.அறிவழகன், பொருளாளராக ஜி.ராஜேஷ், நூலகராக வி.எம்.ரகு ஆகியோர் தேர்தெடுக்கப்பட்டனர். இதேபோல 6 மூத்த செயற்குழு உறுப்பினர்கள், 5 இளம் செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்ற புதியநிர்வாகிகளுக்கு சக வழக்கறிஞர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT