ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகேயுள்ள குத்துக்கல்வலசை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 130-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 6 ஆசிரியர், ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்காக வாரத்துக்கு ஒருநாள் சிறப்பாசிரியர் கணேசன் வகுப்பு எடுத்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை ஒரு வகுப்பறையில் 4, 5-ம் வகுப்பு மாணவர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது, இந்த வகுப்புகளுக்கான ஆசிரியை கேள்வித்தாள் தயார் செய்வதற்காக சென்றுவிட்டார்.
மாணவ, மாணவிகள் தனியாக இருந்த நேரத்தில் அந்தவகுப்பறைக்குள் வந்த சிறப்பாசிரியர் கணேசன் (43) "ஏன் சப்தம்போடுகிறீர்கள்?" என்று கண்டித்துள்ளார். மேலும், மாணவர் ஒருவரை தென்னை மட்டையை எடுத்து வரச்சொல்லி, சில மாணவ, மாணவிகளை அடித்துள்ளார்.
இதில் வலி தாங்க முடியாத மாணவ, மாணவிகள் மாலையில் வீட்டுக்குச் சென்றதும், தங்களது பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளனர். உடனடியாக, பெற்றோர் பள்ளிக்குச் சென்று, தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியை ஆகியோரிடம், சிறப்பாசிரியர் மட்டையால் தாக்கியது குறித்து தெரிவித்தனர்.
பின்னர் 5-ம் வகுப்பு பயிலும் நிஷாந்த் (10), சாரணி (10), 4-ம் வகுப்பு பயிலும் பவிதா (8), அஸ்விதா, ரித்திகா, யுவனி, பூமிகா ஆகிய 7 பேர், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டனர். இதில் நிஷாந்த், பவிதா ஆகியோரைத் தவிர, மற்ற 5 பேரும் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினர்.
போலீஸார் விசாரணை: சிகிச்சையில் இருந்த நிஷாந்த், பவிதா ஆகியோரை, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் உள்ளிட்ட கல்வித் துறை அலுவலர்கள் நேற்று காலை சந்தித்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, நேற்று மதியம் நிஷாந்த், பவிதா ஆகியோரும் சிகிச்சை முடிந்து வீட்டுக்குத் திரும்பினர்.
இதுகுறித்து நிஷாந்தின் தாய் சரஸ்வதி, பவிதாவின் தாய் ராஜேஸ்வரி ஆகியோர் அளித்த புகாரின்பேரில், திருப்புல்லாணி போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் கூறும்போது, "சிறப்பாசிரியர் அடித்ததாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 குழந்தைகளையும் நேரில் பார்த்துவிசாரணை செய்தேன். அவர்களுக்கு எந்த காயமும் இல்லை. அவர்கள் நலமுடன் வீட்டுக்குச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து திங்கள்கிழமை முழுமையாக விசாரணை நடத்தி, முதன்மைக் கல்வி அலுவலரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். சிறப்பாசிரியர் மீது தவறு இருந்தால், முதன்மைக் கல்வி அலுவலர் நடவடிக்கை எடுப்பார்" என்றார்.