தமிழகம்

அதிகாரிகளை சிறைபிடித்த இந்து அமைப்பினர் - சிவன்மலை பாதுகாப்பு மையத்துக்கு சிலைகளை எடுத்து செல்ல எதிர்ப்பு

செய்திப்பிரிவு

திருப்பூர்: காசி விஸ்வநாதர் கோயில் பாலாலயத்தை ஒட்டி, பஞ்சலோக சிலைகளை சிவன்மலை பாதுகாப்பு மையத்துக்கு கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை இந்து அமைப்பினர் சிறைபிடித்தனர்.

காங்கயத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. 100 ஆண்டுகளை கடந்த தொன்மையான இக்கோயிலில், கடந்த சில மாதங்களாக பாலாலயம் செய்வதற்கான திருப்பணிகள் நடைபெற்றன. இதனால் பாதுகாப்பு கருதி, விநாயகர், நடராஜர், சிவகாமி அம்மன், சுப்பிரமணியர், வள்ளியம்மன், தெய்வானை அம்மன், சுந்தரர் உள்ளிட்ட 17 பஞ்சலோக சிலைகளை சிவன்மலையில் உள்ள உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்துக்கு மாற்ற அறநிலையத் துறையினர் முடிவு செய்தனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத் துறை சிவன்மலை உதவி ஆணையர் அன்னக்கொடி தலைமையில், சிலைகளை எடுக்க ஊழியர்கள் சென்றனர். அப்போது அங்கு திரண்ட இந்து அமைப்பினர், கோயிலில் இருந்து பஞ்சலோக சிலைகளை எடுத்துச் செல்லக்கூடாது என அறநிலையத் துறை அதிகாரிகளை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காங்கயம் டிஎஸ்பி பார்த்திபன் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டு, சிலைகள் வாகனத்தில் ஏற்றப்பட்டு, உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

இது தொடர்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியதாவது: சுவாமி சிலைகளைப் பாதுகாக்க ஒவ்வொரு கோயிலிலும், பாதுகாப்பு அறைகளை ( ஸ்ட்ராங் ரூம்கள் ) உருவாக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்காக ரூ.308 கோடி ஒதுக்கீடு செய்தும், கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து இதுவரை 263 பாதுகாப்பு அறைகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன.

அறநிலையத் துறை சார்பில் 1,824 கோயில்களில் பாதுகாப்பு அறைகள் கட்ட தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் 263 பாதுகாப்பு அறைகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. பல திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கும் தமிழக அரசு, இந்த விஷயத்தில் மட்டும் முன்னுரிமை அளிப்பதில்லை.

கோயில்களில் பாதுகாப்பு அறைகள் கட்டாமல் இருப்பது இந்த அரசின் இயலாமையை காட்டுவதாக, உயர் நீதிமன்றம் ஏற்கெனவே கருத்து தெரிவித்திருந்தது. கோயில்களின் சிலைகளை பாதுகாக்க கட்டப்படும் பாதுகாப்பு அறைகள், அனைத்து கோயில்களில் சிலைகளையும் எளிதில் வைப்பதற்கும், விழாக்களின் போது காலதாமதம் இல்லாமல் அதனை தொடர்புடைய கோயில்களில் எளிதில் திருப்பிக் கொடுப்பதற்கும் ஏதுவாக விதிகளை வகுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT