மவுலிவாக்கத்தில் அடுக்கு மாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்தது தொடர்பான வழக்கில் கட்டிடக் கலை நிபுணர் (ஆர்க்கிடெக்ட்) பி.சுகன்யா தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இது தொடர்பாக பி.சுகன்யா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய் திருந்த மனுவில் குறிப்பிடப்பட்டி ருந்ததாவது:
இடிந்து விழுந்த மவுலிவாக்கம் அடுக்கு மாடிக் குடியிருப்புக்கான கட்டிடத்தின் வடிவமைப்பை த்ரிஷ்தி கோன் ஆர்க்கி டெக்சுரல் கம்யூனி கேஷன் நிறுவனம் உருவாக்கியது. பலர் குழுவாக சேர்ந்து அந்த வடிவமைப்பை உருவாக்கினோம். அந்தக் குழுவில் நானும் ஒருவராக இருந்தேன். கட்டிடத்தின் உயரம், அதன் வடிவம், அறைகளின் உயரம் போன்றவற்றை தீர்மானித்ததில் எனது பங்களிப்பு என்பது மிகவும் குறைவானது.
மேலும், கட்டிடத்தின் அஸ்தி வாரம் எவ்வளவு ஆழத்தில் அமைக்கப்பட வேண்டும் என்ப தையோ, கட்டிடம் கட்டத் தேவை யான மண்ணின் தன்மை குறித்து தீர்மானிப்பதிலோ கட்டிடக் கலை நிபுணர்களின் பங்கு எதுவும் இல்லை. மேலும் தூண்களின் தடிமன், இரும்பு கம்பிகளின் தடிமன், கான்கிரீட் கலவை எவ்வாறு இருக்க வேண்டும் என்பது போன்றவை கட்டுமான பொறியாள ரால்தான் தீர்மானிக்கப்படுகின்றன. கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் கட்டிடக் கலை நிபுணர் களான எங்களுக்கு எந்தப் பணியும் இல்லை.
ஆகவே மவுலிவாக்கத்தில் அடுக்கு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் நான் எந்த குற்றமும் இழைக்கவில்லை. இந்த வழக்கின் புலன் விசாரணையில் போலீஸாருக்கு முழு ஒத்துழைப்பு தர நான் தயாராக உள்ளேன். ஆகவே, எனக்கு முன் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்ட நீதிபதி பி.தேவ தாஸ், சுகன்யாவின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து செவ் வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
கட்டிட வடிவமைப்பை உருவாக் குவதில் மனுதாரர் பங்கேற்றுள்ளார். வரைபட ஆவணத்தில் அவர் கையெழுத்திட்டுள்ளார். தற்போது கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணங்கள் பற்றி புலன் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இந்த முக்கியமான கட்டத்தில் மனு தாரருக்கு முன் ஜாமீன் வழங்க இயலாது என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.