தமிழகம்

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரியில் விஜயகாந்த் அறிவிப்பார்: தேமுதிக பொது செயலர் பிரேமலதா தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்த முடிவை ஜனவரி மாதத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார் என கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

தேமுதிக பொது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரேமலதா, சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் நேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தேமுதிகவின் 18-வது செயற்குழு, பொதுக்குழுவில் கட்சித் தலைவரால் எனக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதையொட்டி, தமிழகத்தின் பெரும் தலைவர்களின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினேன். அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் புனரமைப்பு பணிகள் நடைபெறுவதால், அனுமதி வழங்கப்படவில்லை. தலைவர்களுக்கு மரியாதை செலுத்துவதை அரசியலாக பார்க்கவில்லை.

வரப்போவது மக்களவைத் தேர்தல். எனவே, யாருடன் கூட்டணி, எத்தனை தொகுதியில் போட்டி என்பதை பரிசீலிக்க வேண்டும். கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட தேமுதிக தலைவருக்குதான் பொதுக்குழுவில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதனால், வெகுவிரைவில் குறிப்பாக ஜனவரி மாதத்தில் கூட்டணி குறித்த முடிவை கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார்.

தேமுதிக உட்கட்சி தேர்தல் முடிவடைந்துள்ளது. அடுத்தகட்டமாக கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசித்து நல்ல திட்டங்களை செயல்படுத்த இருக்கிறோம். தேமுதிகவின் வாக்கு சதவீதத்தில் எந்த சரிவும் ஏற்படவில்லை. 2006-ம் ஆண்டு கூட்டணியின்றி தேமுதிக போட்டியிட்டது. மாநில அளவில் 8.33 சதவீதம் வாக்குகளை பெற்றோம். அதன்பின்னர் கூட்டணியுடன் களம் கண்டதால் அந்தத் தொகுதிகளில் உள்ள வாக்கு சதவீதம் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகிறது. எனவே, தேமுதிகவின் வாக்கு வங்கி நிலையாகவே இருக்கிறது. அதை அதிகரிப்பது தொடர்பாக வியூகம் வகுத்து செயல்படுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT