சென்னை: தமிழ்நாடு கட்டுமானக் கழக பயிற்சி நிலையத்தில், நலவாரிய பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு இலவச திறன் பயிற்சி, உதவித்தொகையுடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு கட்டுமானக் கழகம், அரசு மற்றும் தனியார் தொழில்நுட்ப கல்வி நிலையங்கள் மூலம் பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு கட்டுமான தொழில் சார்ந்த நவீன பயிற்சிகளை அளித்து வருகிறது.
கட்டுமானத் தொழிலாளர்களும் அவர்களுடைய வாரிசுதாரர்களும் திறன் மேம்பாடு பெறுவதற்கு ஏதுவாக மாநில அரசின் திறன் மேம்பாட்டு கழகம், மத்திய அரசின் திறன் மேம்பாட்டுத் துறை, தேசிய திறன் மேம்பாட்டு கழகம் இவற்றின் மூலமாக திறன் மேம்பாட்டு பயிற்சியும், உதவித்தொகையும், பயிற்சிக்கான கட்டணமும் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் அடிப்படையில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் 54 வகையான தொழில் இனங்களில் 23 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த தொழிலாளர்களுக்குப் பயிற்சி வழங்க முடிவெடுக்கப்பட்டது. முதற்கட்டமாக தச்சர், கொத்தனார், கம்பி வளைப்பவர், பிளம்பர் மற்றும் எலெக்ட்ரீசியன் உள்ளிட்ட 5 தொழில் இனங்களில் ஈடுபடும் பதிவுபெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 7 நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சியும், 3 மாதங்கள் திறன் பயிற்சியும் வழங்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, கட்டுமான தொழில் வளர்ச்சி குழுமம் மற்றும் எல் அண்டு டி கட்டுமான பயிற்சி நிலையம் ஆகியவற்றுடன் ஒப்பந்தம் செய்தது. 7 நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு வரும் தொழிலாளர்களுக்கு தினசரி ரூ.800 உதவித்தொகையும், இலவச தங்குமிடமும், 3 மாதங்கள் திறன் பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு உணவு, தங்குமிடம் மட்டும் இலவசமாக வழங்கப்படும்.
அந்த வகையில் 2023-24-ம் ஆண்டுக்கான தொழிலாளர் நலத்துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டபடி, 4000 தொழிலாளர்களுக்கு 7 நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சியும், 1000 தொழிலாளர்களுக்கு 3 மாதகால திறன் பயிற்சியும் வழங்க ரூ.5.86 கோடி கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் மூலம் ஒதுக்கப்பட்டது.
அதன்படி, முதற்கட்டமாக, கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த 50 தொழிலாளர்களுக்கு இலவச திறன் பயிற்சியையும், 50 தொழிலாளர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சியையும் தையூரில் உள்ள தமிழ்நாடு கட்டுமானக் கழகத்தில் வழங்க, காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் சி.வி.கணேசன், தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா, தொழிலாளர் நலத்துறை செயலர் குமார் ஜயந்த், தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த், கட்டுமானத் தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்.குமார் ஆகியோர் பங்கேற்றனர்.