சிவகங்கை: மழை பொய்த்ததால் சிவகங்கை அருகே டேங்கரில் நீரை விலைக்கு வாங்கி நெற்பயிர்களுக்கு பாய்ச்சி விவசாயிகள் காப்பாற்றி வருகின்றனர். தெற்கு மாரந்தை, வடக்கு மாரந்தை, கோலாந்தி, தளிர்தலை, கோரவலசை, கீழச்சேத்தூர், மேலச் சேத்தூர், இலந்தக்கரை, பளுவூர், கோடிக்கரை, கோ.மருதங்குடி, கிராம்புலி, டி.பெருங்கரை, விளங்காட்டூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பல ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. இப்பகுதியில் பெரும்பாலாலும் மானாவாரியாக நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
இந்தாண்டு அப்பகுதியில் மழை பொய்த்து போனதால் நெற்பயிர்கள் கருகி வருகின்றன. இதையடுத்து பயிர்களை காப்பாற்ற அப்பகுதி விவசாயிகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். சிலர் பண்ணைக் குட்டைகள், கண்மாய்களில் தேங்கியுள்ள நீரையும் மோட்டார் மூலம் எடுத்து பயிர்களுக்கு பாய்ச்சி வருகின்றனர். சிலர் குடியிருப்பு பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வருகின்றனர். அதற்கும் வழி யில்லாதவர்கள், டேங்கர் நீரை விலைக்கு வாங்கி பயிர்களை காப்பாற்றி வருகின்றனர்.
இதுகுறித்து வடக்கு மாரந்தை விவசாயி ஜெயபாலன் கூறியதாவது: ஜோதி ரக நெல் விற்பனைக் காகவும், ஆர்என்ஆர், டிஎல்எக்ஸ் ரகங்கள் சாப்பாட்டுக்காகவும் சாகுபடி செய்துள்ளோம். இதில் அதிகபட்சம் ஜோதி ரக நெல் தான் சாகுபடி செய்தோம். மழை பொய்த்துப் போனதால் சாப்பாட்டுக்காக சாகுபடி செய்த நெற்பயிர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். ஒரு டேங்கரில் 5,000 லி. தண்ணீர் இருக்கும். நெல் பரிச்சல் நிலையில் ஒரு ஏக்கருக்கு குறைந்தது 20 முதல் 24 டேங்கர் நீர் தேவைப்படுகிறது. ஒரு டேங்கர் நீரை ரூ.600 முதல் ரூ.800 வரை வாங்குகிறோம். இதனால் ஒரு ஏக்கருக்கு குறைந்தது ரூ.12,000 முதல் ரூ.16,000 வரை தண்ணீருக்கே செலவழிக்க வேண்டியுள்ளது. ஜோதி ரக நெற்பயிர்கள் கருகி விட்டன. அவற்றுக்கு இழப்பீடு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.