'என்னை இனி பொதுமேடைகளில் அதிகமாக பார்க்கலாம். இனி திமுக நடத்தும் அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்பேன்' என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் தாம்பரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நடிகரும் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். திமுக கொடியை கையில் ஏந்தியபடி கட்டண உயர்வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய உதயநிதி ஸ்டாலின், பின்னர் மேடையில் பேசும்போது 'பஸ் கட்டண உயர்வுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளேன். என்னை இனி பொதுமேடைகளில் அதிகமாக பார்க்கலாம். இனி திமுக நடத்தும் அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்பேன். மக்களோடு இருக்கவே விரும்புகிறேன். தமிழக அரசு என்று ஒன்று இருக்கிறதா என்பதே தெரியவில்லை' என்று கூறினார்.
சென்னை சேப்பாக்கத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், பேருந்து கட்டண உயர்வுக்கு டீசல் விலை உயர்வை காரணம் காட்டும் தமிழக அரசு, போக்குவரத்து கழங்களுக்கு முன்பு வந்த வருவாய் எங்கே போனது என விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறினார்.
சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மகளிர் அணி தலைவர் கனிமொழி எம்.பி தலைமை தாங்கினார்.
இதேபோல், நெல்லை பாளையங்கோட்டையில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேருந்து போல அமைக்கப்பட்டிருந்த மேடையில் திமுகவினர் ஏறி நின்று கோஷங்களை எழுப்பினர்.
பேருந்து கட்டண உயர்வை கண்டிக்கும் வகையில் திமுக தொண்டர்கள் மாட்டு வண்டிகளில் வந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.