தமிழகம்

விசாரணைக் கைதிகளின் பற்கள் உடைப்பு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

கி.மகாராஜன்

மதுரை: விசாரணைக் கைதிகளின் பற்கள் உடைக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பா சமுத்திரத்தைச் சேர்ந்த அருண் குமார், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "அம்பை காவல் நிலையத்தில் விசாரணைக்கு சென்ற எனது பற்களை ஏ.எஸ்.பி பல்வீர் சிங் உடைத்தார். என்னைப் போல் பலரின் பற்களை அவர் உடைத்துள்ளார். இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். அம்பை காவல் நிலையத்தில் மார்ச் 10-ம் தேதி காலை 10 மணி முதல் மார்ச் 11ம் தேதி இரவு 10 மணி வரை கண்காணிப்பு கேமரா காட்சிகளை எனக்கு வழங்கவும், வன்கொடுமை வழக்கில் எனக்கு உரிய இழப்பீடு வழங்கவும், சம்பவம் குறித்து விசாரணை நடத்திய ஐஏஎஸ் அதிகாரி அமுதா மற்றும் நெல்லை துணை ஆட்சியரின் விசாரணை அறிக்கையை வழங்கவும் உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவில் ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் முன்பு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. விரைவில் நீதிமன்றமத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும். சம்பவ நாளில் அம்பை காவல் நிலைய சிசிடிவி கேமரா ஆப் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து துறை ரீதியாக விசாரணை நடைபெற்று வருகிறது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், மனுவுக்கு அரசு தரப்பில் பதிலளிக்க தாமதம் செய்யப்படுவதற்கு நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து வழக்கின் இறுதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT