நாகர்கோவில்: பேச்சிப்பாறை பகுதியில் 6 காணி மலைவாழ் குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த 79 வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதுவரை இருளில் தவித்த காணி மக்கள் வீடுகளில் ஒளி வீசியதால் மகிழ்ச்சி அடைந்தனர்.
குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே மணலோடை மலைவாழ் கிராமத்தில் காணி மலைவாழ் குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: "கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைவாழ் பகுதியில் மின் இணைப்பு வழங்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் திட்டமிடப்பட்டதன் அடிப்படையில் கடந்த ஜூலை மாதத்தில் சிலாங்குன்று, கடுவாவெட்டி ஆகிய பகுதிகளில் செல்போன் நிறுவனத்தின் உதவியுடன் 2 வீடுகளில் வசிக்கும் 9 குடும்பங்களுக்கும் இதன் தொடர்ச்சி யாக மாறாமலை, முகலியடிமலை, புதுப்பாறை, வேட்டாவிளை, களப்பாறை, புன்னமூட்டு தேரி ஆகிய 6 கிராமங்களை சேர்ந்த 78 குடும்பங்களுக்கும் சோலார் மின் இணைப்பு வழங்கப்பட்டது.
இந்த சோலார் மின் இணைப்பு தொடர்ந்து 6 மணி நேரம் செயல்படும். மேலும் காணி மலைப்பகுதியை சேர்ந்த 50 வீடுகளுக்கு இதுநாள்வரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இது குறித்து பத்மநாபபுரம் சார் ஆட்சியர் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த 50 வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் பட்சத்தில் குமரி மாவட்டம் முழு மின்சார வசதி உள்ள மாவட்டமாக மாறும் என்றார்.
சோலார் மின் இணைப்பு வழங்கப்பட்டதன் மூலம் இருள் சூழ்ந்த இடத்தில் ஒளி வீசியதால் மலைவாழ் காணி இன மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். இனி வரும் காலங்களில் குழந்தைகள் சிரமமின்றி கல்வி பயில்வதற்கும், பயமின்றி மலையோர குடியிருப்பு பகுதியின் வெளியே நடமாடுவதற்கும் சோலார் மின் இணைப்பு பேருதவியாக இருக்கும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கவுசிக், மாவட்ட வன அலுவலர் இளையராஜா, மாவட்ட தனி வருவாய் அலுவலர் ரேவதி மற்றும் அலுவலர்கள், காணி மக்கள் கலந்து கொண்டனர்.