தமிழகம்

‘ஸ்மார்ட்’ நகரமாகிறது பொன்னேரி: உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்

செய்திப்பிரிவு

பொன்னேரி உள்பட 3 இடங்களில் ஸ்மார்ட் நகரங்கள் (ஸ்மார்ட் சிட்டி) அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வடசென்னையில் தொழிற் சாலைகள் நிறைந்த பகுதியான எண்ணூர்-கும்மிடிப்பூண்டி இடையே அமைந்துள்ள சிறிய நகரம் பொன்னேரி. இது ஸ்மார்ட் சிட்டியாக ஆக்கப்படுவதன் மூலம், பொன்னேரியில் சாலை உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்; தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும்.

ஏற்கெனவே, தென்னிந்தியாவில் 3 தொழில்கேந்திரங்களை அமைக்க ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை (ஜிகா) தேர்வுசெய்த நகரங்களில் பொன்னேரியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமையின் துணை தலைமை நிர்வாகி இச்சிகுச்சி தொமாஹைட் கூறும்போது, “சென்னை துறைமுகம் அருகே விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள இடவசதி இல்லை. அருகேயுள்ள எண்ணூர், போக்குவரத்து பிரச்சினையால் தத்தளிக்கிறது. பொன்னேரியில் ஏராளமான தரிசு நிலம் உள்ளது. அந்த வகையில், சென்னை-பெங்களூர் தொழில் மேம்பாட்டுச்சாலை திட்டத்தில் ஸ்மார்ட் நகரம் அமைக்க பொன்னேரி நகரை தேர்வுசெய்திருப்பது அருமையான முடிவு.

பொன்னேரி மாஸ்டர் திட்ட தயாரிப்புப் பணி அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும். அதற்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றதும் சாலை உள்கட்டமைப்பு மற்றும் குடிநீர் வசதி திட்டங்களுக்கான நிதி அளிப்பது தொடர்பாக மத்திய அரசிடம் ஆலோசிக்கப்படும்” என்றார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பொன்னேரியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் கல்வி, சுகாதாரம் உட்பட அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் விரும்புகிறார்கள்.

SCROLL FOR NEXT