சேலம்: சேலத்தை அடுத்த தளவாய்ப்பட்டியில் உள்ள ஆவின் பால் பண்ணை எதிரே தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார்.
மாநில பொதுச்செயலாளர் பழனிமுருகன், மாநில பொருளாளர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் வேல் முருகன் வரவேற்றார். இதில் விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, பால் கேன்களை தலையில் சுமந்தபடியும், பசு மாட்டுடனும் பங்கேற்று, பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
கோரிக்கை குறித்து மாநில தலைவர் வேலுசாமி கூறியது: தமிழக அரசு 2022-ம் ஆண்டு பசும் பால் கொள்முதல் விலையை லிட்டர் ரூ.35, எருமை பால் லிட்டர் ரூ.44 என உயர்த்தியது. இந்நிலையில் கால்நடைகளுக்கு தேவையான தீவனப் பொருட்களின் விலை அதிகரித்து உள்ளது. இதனால் அரசு வழங்கி வரும் பாலுக்கான விலை போதுமானதாக இல்லை.
எனவே, பசும் பால் கொள்முதல் விலையை ரூ.45, எருமைப் பால் கொள்முதல் விலையை ரூ.54 என உயர்த்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தோம். இதன் காரணமாக, பால் உற்பத்தியாளர்கள் தினமும் நஷ்டத்தை நோக்கி சென்று கொண்டுள்ளனர். எனவே, பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை அரசு கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும், என்றார்.
கால்நடைகளுக்கு தேவையான தீவனப் பொருட்களின் விலை அதிகரித்து உள்ளது. இதனால் அரசு வழங்கி வரும் பாலுக்கான விலை போதுமானதாக இல்லை.