கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி அருகே பழங்குடியின மக்களுக்காக பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட வீடுகள், அலுவலர்களின் அலட்சியத்தால் 3 ஆண்டு களாகியும் முழுமை பெறாமல் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் சிகரமாகனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் கே.கொத்தூர். ஆந்திரா மாநில எல்லையை ஒட்டி மலைகள் சூழ்ந்து காணப்படும் இக்கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், 100 நாள் வேலை திட்டம், காடுகளில் கிடைக்கும் விறகுகள், தேன் உள்ளிட்டவற்றை சேகரித்து கிடைக்கும் வருவாயை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். சிலர், ஆந்திர மாநிலத்திற்கு கட்டிட கூலி வேலைக்கு சென்று வருகின்றனர்.
குடிசையில் வசிக்கும்…: இந்நிலையில், பழங்குடியின மக்களுக்கு கடந்த 1980, 1985-ம் ஆண்டுகளில் தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன. இந்த வீடுகள் பெரும்பாலும் சேதமாகி உள்ள நிலையிலும், ஒவ்வொரு வீட்டிலும் 2 முதல் 3 குடும்பத்தினர் சிரமத்துடன் வசிக்கின்றனர். சிலர் தொகுப்பு வீடுகளின் அருகே குடிசை அமைத்து வசித்து வருகின்றனர்.
ரூ.72 லட்சம் நிதி ஒதுக்கீடு: இந்நிலையில் தங்களுக்கு பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித் தரக் கோரி, பழங்குடியின மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்று 2019-ம் ஆண்டு வீடுகள் கட்ட இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து, பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் கடந்த 2020 -21-ம் நிதியாண்டில் 24 வீடுகள் கட்ட, ரூ.72 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதே போல் ஒவ்வொரு வீட்டிற்கும் கழிவறை கட்ட ரூ.12 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது. பசுமை வீடுகள் கட்டுமான பணியை ஒப்பந்தம் எடுத்தவர்கள் 3 ஆண்டுகளாகியும் பணிகளை முழுமையாக முடிக்காமல் உள்ளதால், மழை, வெயில் என சேதமான வீடுகளில் அச்சத்துடன் வசிக்கும் நிலை உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
ஜன்னல், கதவுகள் இல்லை: இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, எங்களது தொடர் கோரிக்கையை ஏற்று 24 குடும்பத்தினருக்கு பசுமை வீடுகள் திட்டத்தில் வீடு கட்டித்தர அரசு நிதி ஒதுக்கியது. 2021-ம் ஆண்டே வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால், 3 ஆண்டுகளாக வீட்டு பணிகள் முழுமை பெறவில்லை. குறிப்பாக கட்டப்பட்ட வீடுகளில் சிலவற்றில் ஜன்னல், கதவுகள் இல்லை.
சில வீடுகள் செங்கல் சுவர் கட்டப்பட்டு, சிமென்ட் பூச்சு வேலை நடைபெறவில்லை. மின் இணைப்புகள், குடிநீர், சாலை வசதி, கழிவறை செப்டிக் டேங்க், இணைப்பு கொடுக்கவில்லை. ஆட்சியர் ஆய்வு செய்ய வலியுறுத்தல்: ஒவ்வொரு வீட்டிலும் பணிகள் நிறைவு பெறாமல் உள்ள நிலையில், அனைத்து வீடுகளிலும் முன்பு ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களை நிற்க வைத்து புகைப்படம் மட்டும் எடுத்துள்ளனர்.
வீடுகளின் தரமும் கேள்விக் குறியாக உள்ளது. இதற்கு அலுவலர்களின் கண்காணிப்பு இல்லாமல் அலட்சிய போக்கே முழு காரணமாகும். எனவே, மாவட்ட ஆட்சியர் புதிதாக கட்டப்பட்ட பசுமை வீடுகளின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும். தொடர்புடைய அலுவலர்கள் மூலம் பணிகளை விரைந்து முடித்து எங்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.