பெருங்களத்தூர்: வண்டலூர் உயிரியல் பூங்காவை ஒட்டியுள்ள சதானந்தபுரம், ஆலப்பாக்கம் நெடுங்குன்றம் ஏரிகளில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதியில் புகும் முதலைகளை வனத்துறையினர் பிடித்து செல்வது வழக்கமாக உள்ளது. இதுவரை, ஏழு முதலைகள் பிடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நேற்று காலை, ஆலப்பாக்கம்– மப்பேடு சாலையில், இந்திய விமானப் படை பயிற்சி மைய சுற்றுச்சுவரை ஒட்டி, முதலை ஒன்று படுத்திருப்பதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்தனர். இது குறித்து, உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 10-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் விரைந்து, சுற்றுச் சுவரை ஒட்டி படுத்திருந்த முதலையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, அச்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அரை மணி நேரம் போராடி, அந்த முதலையை பிடித்தனர். பின், வனத்துறை வாகனத்தில் ஏற்றி, கிண்டி சிறுவர் பூங்கா முதலை பண்ணைக்கு கொண்டு சென்றனர்.