சென்னை: மக்களவையில் நுழைந்து இருவர் அத்துமீறலில் ஈடுபட்ட விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவது:
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: மக்களவைக்குள் புகைக் குண்டுகளுடன் அத்துமீறி இருவர் நுழைந்ததற்கு எனது கடும் கண்டனங்கள்.இந்திய இறையாண்மைக்கு சவால்விடும் இத்தகைய சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைஎடுக்க வேண்டும். நாடாளுமன்றத்தின்பாதுகாப்பு குறைபாடுகளை உடனடியாக வலிமைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: மைசூரு பாஜக எம்.பி.பரிந்துரையின் பேரில் மக்களவை பார்வையாளர் மாடத்துக்கு வந்த இளைஞர் திடீரென்று இருக்கைகள் மீது எகிறி குதித்தது பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது. இத்தகைய பாதுகாப்பு குறைபாட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாபொறுப்பேற்க வேண்டும். இச்சம்பவம்குறித்து உரிய விசாரணை செய்து நாடாளுமன்ற வளாகத்துக்கும், உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பை உள்துறை அமைச்சகம் உறுதி செய்ய வேண்டும்.
சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: தமிழக ஆளுநர் மாளிகைக்கு வெளியே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தின்போது சட்டம் ஒழுங்கு சரியில்லை என அவப்பெயர் ஏற்படுத்த முயற்சித்தனர். இச்சம்பவத்துக்கு என்ன கருத்து சொல்வார்கள்? யாரை குற்றம் சொல்வார்கள்?
பாமக நிறுவனர் ராமதாஸ்: நாடாளுமன்றத்துக்குள் மிகவும் எளிதாக நுழைந்து இத்தகைய தாக்குதலை நடத்த முடியும் என்பது மிகவும் கவலையளிக்கிறது. வண்ணப்புகைக் குப்பிகளுடன் நுழைய முடியும்போது துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் ஆகியவற்றுடன் ஏன் நுழைய முடியாது? இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி, பாதுகாப்பு தணிக்கை செய்ய வேண்டும்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி நாடாளுமன்றத்தில் நடந்துள்ள நிகழ்வு அதிர்ச்சி அளிக்கிறது. நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக்கு ஏற்பட்ட அலட்சியப் போக்கு குறித்து மத்திய அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும்.
அமமுக பொதுச்செயலாளர் தினகரன்: பன்னடுக்கு பாதுகாப்பு கட்டமைப்பு கொண்ட மக்களவையில் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்வதோடு, நாடாளுமன்றம் முழுவதும் மக்கள் பிரதிநிதிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
புதிய தமிழகம் கட்சித் தலைவர்கிருஷ்ணசாமி: இந்த வன்செயலை வன்மையாக கண்டிக்கிறோம். பல அடுக்குப் பாதுகாப்பை மீறி மக்களவைக்குள் 2 பேர் சென்றது எப்படி? என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கான பதிலை கண்டறிந்து தெரிவிக்க வேண்டும்.
வி.கே.சசிகலா: இச்சம்பவம் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறைபாடு களை வெளிப்படுத்தியுள்ளது. மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.