தமிழகம்

அமைச்சர் பொன்முடி வழக்கில் தனி நீதிபதியின் கருத்து என்னை களங்கப்படுத்தும் செயல்: ஓய்வுபெற்ற வேலூர் நீதிபதி விளக்க மனு

செய்திப்பிரிவு

சென்னை: அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கில் தனக்கு எதிராக தனி நீதிபதி தெரிவித்துள்ள கருத்து தன்னை களங்கப்படுத்தும் செயல் என்றும், இந்த கருத்துகளை உத்தரவில் இருந்து நீக்க வேண்டுமெனவும் கோரி, ஓய்வுபெற்ற வேலூர் மாவட்ட முதன்மை நீதிபதி என்.வசந்தலீலா உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு விளக்க மனு அனுப்பியுள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மனைவியை விடுதலை செய்து வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் பிறப்பித்துள்ள தீர்ப்பை மறுஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கடந்த ஆக.10-ல் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை மேற்கொண்டார்.

அப்போது பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த இந்த வழக்கு ஜூன் 6-ம் தேதி முதல் நேர்த்தியாக நகரத் தொடங்கியுள்ளது என்றும், ஜூன் 23-ல் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்ட 4 நாட்களில், ஜூன் 28-ல், 172 சாட்சிகள், 381 ஆவணங்களுடன் 226 பக்க தீர்ப்பில் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரை விடுதலை செய்து வேலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் தனி நீதிபதி தெரிவித்துள்ள கருத்துகள் தொடர்பாக ஓய்வுபெற்ற வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியான கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த என்.வசந்தலீலா உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு அனுப்பியுள்ள விளக்க மனு:

இந்த வழக்கை கடந்தாண்டு ஜூலை 12-ல் விழுப்புரத்தில் இருந்து வேலூருக்கு உயர் நீதிமன்றம்தான் மாற்றியது. இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வாரம் ஒருமுறை என்ற அடிப்படையில் விசாரிக்கப்பட்டது.

மொத்தம் 40 நாட்கள் நடந்த விசாரணையில் அதுதொடர்பான உத்தரவுகளை கவனத்தில் கொள்ளாமல் தன்னைப்பற்றி தனி நீதிபதி தெரிவித்துள்ள கருத்துகள் தேவையற்றது மட்டுமல்ல ஏற்றுக்கொள்ள கூடியதும் அல்ல.

ஜூன் முதல் வாரத்தில் இருந்தே குற்றம்சாட்டப்பட்டவர்களின் நட்சத்திர பலன்கள் மாவட்ட நீதிபதி உள்ளிட்ட நீதித்துறை அதிகாரிகளின் ஆசியுடன் நேர்த்தியாக நகரத் தொடங்கியுள்ளது என தனி நீதிபதி தெரிவித்துள்ள கருத்து தன்னை களங்கப்படுத்தும் செயல்.

குற்றம்சாட்டப்பட்டவர்களின் ஜாதகப் பலன்கள் எனது தீர்ப்பில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தியது இல்லை. உச்ச நீதிமன்றம் முதல் கீழமை நீதிமன்றம் வரை எந்த நீதிமன்றமும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஜாதகத்தை நம்புவதில்லை.

இந்த வழக்கு வேலூருக்கு மாற்றப்படும் முன்பாக 20 ஆண்டுகளாக விழுப்புரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்துள்ளது. இந்த வழக்கில் யாருக்கும் சாதகமாகவோ அல்லது அச்சத்தின் அடிப்படையிலோ தீர்ப்பு வழங்கவில்லை. ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே தீர்ப்பளித்துள்ளேன். விழுப்புரம் நீதிமன்றத்தில் 90 சதவீத விசாரணை முடிவடைந்த நிலையில் எஞ்சிய 10 சதவீத விசாரணை மட்டுமே தனது நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கில் வாதங்கள் முடிந்து 10 நாட்களுக்குப் பிறகே தீர்ப்பளித்தேன்.

அரசு தரப்பு சாட்சியங்கள், எழுத்துப்பூர்வ வாதங்கள் என 150 பக்கங்கள் தவிர்த்து 75 பக்கங்கள் மட்டுமே தீர்ப்பாக எழுதப்பட்டது. இந்த வழக்கில் தனது தரப்பு விளக்கத்தை கோராமலேயே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் என்னைப் பற்றி விமர்சித்துள்ளார். ஒரே உத்தரவில், 28 ஆண்டுகளாக கட்டிக்காத்த எனது பணி நேர்மையை பறித்துள்ளார். என்ன தவறு செய்தேன் என்பதற்கு எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை. எனவே என்னைப்பற்றி நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ள கருத்துகளை உத்தரவில் இருந்து நீக்க வேண்டும் என அதில் கோரியுள்ளார்.

SCROLL FOR NEXT