தமிழகம்

புயல், மழை பாதிப்பால் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த சென்னை போலீஸார் வழக்கமான பணிக்கு திரும்பினர்

செய்திப்பிரிவு

சென்னை: புயல், மழை பாதிப்பு மீட்பு பணிகளில் முழு அளவில் ஈடுபட்டிருந்த சென்னை போலீஸார் வழக்கமான பணிக்கு திரும்பினர். மிக்ஜாம் புயல் மற்றும் அதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 3-ம் தேதி இரவுமுதல் மறுநாள் இரவு வரை இடைவிடாது மழை பெய்தது. இதனால், இந்த 4 மாவட்டங்களிலும் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. இதையடுத்து மீட்பு பணிகளில் அரசு ஈடுபட்டது.

18,400 போலீஸார்: குறிப்பாக சென்னையில் மாநகராட்சி, தீயணைப்பு, வருவாய், பேரிடர் உட்பட அனைத்து அரசு துறைகளுடன் சென்னை போலீஸார் மீட்பு பணிக்காக களத்தில் இறக்கி விடப்பட்டனர். குறிப்பாக சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, ஆயுதப்படை, போக்குவரத்து காவல், மத்திய குற்றப் பிரிவு உட்பட அனைத்து பிரிவுகளிலிருந்தும் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமையில் மொத்தம் 18,400 போலீஸார் மழை பாதிப்பு மீட்பு பணிக்காகவும், நிவாரண உதவிகள் வழங்கும் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், புயலால் சாய்ந்த மரங்களையும் வெட்டி அப்புறப்படுத்தினர். தற்போது, சில பகுதிகளை தவிர அனைத்து பகுதிகளும் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டன. இதையடுத்து போலீஸார் மழை பாதிப்பு மீட்பு பணிகளிலிருந்து வழக்கமான பணிக்கு திரும்புமாறு காவல் ஆணையர் உத்தரவிட்டார். இதையடுத்து, சென்னை போலீஸார் நேற்று முதல் தங்களது வழக்கமான பணிக்கு திரும்பினர்.

SCROLL FOR NEXT