தமிழகம்

பிரதமர் திட்டத்தில் வீடு கட்ட ஒதுக்கிய 54 சிமென்ட் மூட்டைகளுக்காக பெண் அலைக்கழிப்பு

செய்திப்பிரிவு

மானாமதுரை: மானாமதுரை அருகே பிரதமரின் குடியிருப்புத் திட்டத்தில் வீடு கட்ட ஒதுக்கிய 54 சிமென்ட் மூட்டைகளை வாங்குவதற்காக பெண் கூலித் தொழிலாளி ஓராண்டாக அலைந்து வருகிறார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மிளகனூரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி தேவி (35). இவருக்கு பிரதமர் குடியிருப்புத் திட்டத்தில் கடந்த ஆண்டு வீடு ஒதுக்கப்பட்டது. வீடு கட்ட அவருக்கு ரூ.1.70 லட்சம் ஒதுக்கப்பட்டநிலையில், அதில் 104 சிமென்ட் மூட்டைகளுக்கான தொகை பிடித்தம் செய்யப்பட்டது. ஆனால், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் 50 சிமென்ட் மூட்டைகள் வழங்கிய நிலையில், 54 மூட்டைகளை வழங்கவில்லை. இருப்பினும் தேவி வீடு கட்டி 3 மாதங்களுக்கு முன்பு குடியேறினார். அவர் 54 சிமென்ட் மூட்டைகளை கேட்டு கடந்த ஓராண்டாக மானாமதுரை ஒன்றிய அலுவலகம், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என அலைந்து வருகிறார். ஆனால் சிமென்ட் மூட்டைகளை அதிகாரிகள் வழங்காமல் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து தேவி கூறுகையில் ‘‘வீடு கட்ட ஒதுக்கிய ரூ.1.70 லட்சத்தில் தலா ரூ.330 வீதம் 104 சிமென்ட் மூட்டைகளுக்குப் பிடித்து கொண்டனர். ஆனால் 54 மூட்டைகளைத் தர மறுத்துவிட்டனர். இதற்காக ஓராண்டாக அலைந்து வருகிறேன். மேலும் கடனை வாங்கி வீடே கட்டி முடித்துவிட்டோம். சிமென்ட் மூட்டைகள் தராவிட்டாலும், 54 மூட்டைகளுக்குரிய பணத்தையாவது வழங்க வேண்டும்’’ என்று கூறினார். இதுகுறித்து மானாமதுரை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) மாலதி கூறுகையில் ‘‘வீடு கட்ட 104 சிமென்ட் மூட்டைகளுக்கு அனுமதி வாங்கியுள்ளார். அதன்படி பணம் பிடித்தம் செய்துள்ளனர். ஆனால் அவர் 54 மூட்டைகளை வாங்கவில்லை. நான் தற்போதுதான் பணியில் சேர்ந்துள்ளேன். சிமென்ட் மூட்டைகளுக்குரிய பணம் பெற்றுத் தரப்படும்’’ என்று கூறினார்.

SCROLL FOR NEXT