கோவை: அனைத்து மோட்டார் வாகனங்களும் போக்குவரத்து துறையால் பதிவு செய்யப்படுகின்றன. அப்போது இதற்கென பதிவெண் வழங்குகின்றனர். வாகனத்தின் முன்னும், பின்னும் நம்பர் பிளேட்டில் உள்ள பதிவு எண் மூலம் வாகனம் திருடுபோனாலோ, விபத்து காலத்திலோ அடையாளம் காண முடிகிறது. வாகனத்தின் பதிவு எண்ணுக்கு முன்னால், வாகனம் பதிவு செய்யப்பட்ட மாநிலத்தின் பெயரும், அந்த வாகனம் பதிவு செய்யப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலக எண்ணும் குறிப்பிடப்படுகிறது. ஆனால், சில இளைஞர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள் பயன்படுத்தும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் விதிமுறைகளின்படி பதிவு எண்கள் சரியாக இருப்பதில்லை.
உதாரணமாக சிலர், 8055 என்ற பதிவு எண்ணை ‘BOSS’ எனவும், 4667 என்பதை ‘அம்மா’ எனவும், 5181 என்பதை ‘SIBI’ என்றும், 9061 என்பதை ‘GOBI’ என்றும் எழுதி வருகின்றனர். பலர் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் தங்களுக்கு பிடித்த தலைவர்கள், நடிகர்களின் படங்கள், பெயர்கள், குடும்ப உறுப்பினர்கள் பெயர்கள், வாசகங்கள், கருத்துகள் என வாகன பதிவு எண்களை படித்தறிய முடியாத அளவுக்கு ‘ஸ்டைலான’ வடிவத்திலும், வண்ணத்திலும் மாற்றி எழுதி வைக்கின்றனர். இறுதியில் சிறிய அளவில், கடமைக்கு வாகன பதிவு எண்ணை எழுதுகின்றனர்.
இதனால் வாகன விபத்து ஏற்பட்டாலோ அல்லது அந்த வாகனம் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்றுவிட்டாலோ, உடனடியாக அந்த வாகனங்களின் பதிவெண்ணை தெரிந்துகொள்ள முடியாத நிலை உருவாகிறது. இதனால், குற்றங்களில் ஈடுபடுவோர் தப்பிச் செல்ல வழி ஏற்படுகிறது. எனவே, போலீஸாரும், போக்குவரத்து துறையும் இணைந்து விதிகளைமீறி விதவிதமான நம்பர் பிளேட்டுகளுடன் வலம் வரும் வாகனங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
‘ஃபேன்சி’-க்கு அனுமதி இல்லை: நம்பர் பிளேட்டுகள் எப்படி இருக்க வேண்டும் என வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கூறியதாவது: 1989-ம் ஆண்டு மத்திய மோட்டார் வாகன விதி 50 மற்றும் 51-ன் படி அனைத்து வாகனங்களிலும் ‘நம்பர் பிளேட்’ பொருத்தப்பட்டிருக்க வேண்டும். அதில், பதிவெண் தவிர எந்தவிதமான பெயர்களோ, வாசகங்களோ இருக்கக்கூடாது. தங்கள் விருப்பம்போல் எழுதப்படும் ‘ஃபேன்சி’ எழுத்துகளுக்கும் அனுமதி இல்லை. மோட்டார் வாகன விதிமுறைப்படி இருசக்கர வாகனத்துக்கு முன்புற நம்பர் பிளேட்டில் எழுத்து மற்றும் எண்கள் 30 மி.மீ உயரம், 5 மி.மீ. தடிமனுடன், 5 மி.மீ. இடைவெளியில் இருக்க வேண்டும்.
பின்புறம், எழுத்து, எண்கள் 40 மி.மீ. உயரம், 7 மி.மீ. தடிமனுடன், 5 மி.மீ. இடைவெளியில் இருக்க வேண்டும். கார் மற்றும் 4 சக்கர வாகனங்களின் முன், பின்புறங்களில் எழுத்து மற்றும் எண்கள் 65 மி.மீ. உயரம், 10 மி.மீ. தடிமனுடன், 10 மி.மீ. இடைவெளியில் இருக்க வேண்டும். வாடகை வாகனங்களில் மஞ்சள் பின்புலத்தில், கறுப்பு நிறத்தில் பதிவெண்கள் எழுதப்பட வேண்டும். சொந்த வாகனங்களில் வெள்ளை பின்புலத்தில் கறுப்பு நிறத்தில் எழுத்துக்கள் இருக்க வேண்டும். பதிவெண்கள், வாசிக்க சிரமமில்லாத எழுத்துகளில் இருக்க வேண்டும்.
உயர் பாதுகாப்பு ‘நம்பர் பிளேட்’ - புதிதாக பதிவாகும் வாகனங்களுக்கு உயர் பாதுகாப்பு கொண்ட நம்பர் பிளேட்டுகள் (எச்எஸ்ஆர்பி) பொருத்துவது கடந்த 2019 ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை, சம்பந்தப்பட்ட வாகன விற்பனையாளரே அரசு அங்கீகரித்துள்ள முகவரிடம் பெற்று வாகனத்துடன் வழங்குவார். அவ்வாறு, உரிய எச்எஸ்ஆர்பி நம்பர் பிளேட் பெற்றால் மட்டுமே வாகன பதிவு சான்று வழங்கப்படுகிறது. இந்த நம்பர் பிளேட்டை மாற்றி, போலியாக நம்பர் பிளேட் பொருத்த முடியாது.
மேலும், இந்த நம்பர் பிளேட் மூலம் வாகன விவரத்தின் உண்மைத்தன்மையை போக்குவரத்து துறையினர் எளிதாக கண்டறிய முடியும். மேலும், இதுபோன்ற நம்பர் பிளேட் பொருத்தப்பட்ட வாகனங்கள் சாலையில் செல்லும்போது விதிமீறலில் ஈடுபட்டால், சாலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறிந்து அபராதம் விதிக்க முடியும். அபராத விவரத்தை எஸ்எம்எஸ் மூலம் உரிமையாளருக்கு அனுப்ப முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
அபராதம் எவ்வளவு? - போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறும்போது, “நம்பர் பிளேட் விதிமீறல்கள் மீது எங்களுடன் இணைந்து, போலீஸாரும் அபராதம் விதித்து வருகின்றனர். மத்திய மோட்டார் வாகன விதிப்படி முதன்முறை விதிமீறலுக்கு ரூ.500-ம், அடுத்தமுறை ரூ.1500-ம் அபராதமாக விதிக்கப்படுகிறது. ஆபத்தான நேரங்களில் வாகன எண்தான் வாகன ஓட்டிகளுக்கு உதவிகரமாக அமையும் என்பதால் வாகன பதிவெண்ணின் முக்கியத்துவத்தை வாகன உரிமையாளர்கள் உணர வேண்டும்” என்றனர்.