கோவை: ‘மிக்ஜாம்' புயல் பாதிப்பு நிவாரண தொகை மக்களிடம் சேருவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் ‘துளிர்’ திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு பேரீச்சம் பழம் மற்றும் நீரா பானம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிறகு வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது செல்லும் என உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது, அம்மக்கள் ஜனநாயக பாதைக்கு திரும்ப உதவும். சிறப்பு அந்தஸ்து இருந்ததால் வேலை வாய்ப்பு, கட்டமைப்பு வசதிகள் உருவாக்க முடியாத நிலை இருந்தது.
பெண்கள் வேறு மாநில இளைஞர்களை திருமணம் செய்தால் சொத்துகளை இழக்க வேண்டி இருந்தது. ஜம்மு காஷ்மீரில் தேர்தல் விரைவில் நடப்பதை மத்திய அரசு உறுதி செய்யும். அம்மக்களின் நீதிக்கான பயணத்தில் ஒரு மைல் கல்லை எட்டி உள்ளார்கள். சென்னைக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்லும் வழியில் வழி மறித்து ஆளுங்கட்சியினர் குடோனுக்கு கொண்டு சென்று, கட்சி ரீதியாக கொடுப்பதாக புகார் வருகிறது.
இதனை அரசு கவனத்தில் எடுத்து கொண்டு நிவாரண பொருட்கள் மக்களுக்கு சென்று சேருவதை உறுதி செய்ய வேண்டும். கமல்ஹாசன் சிறந்த நடிகர். மக்கள் துயரத்தில் பங்கேற்பது தான் அரசியல் பணி. வசனம் பேசுவது அல்ல அரசியல். சென்னையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் நிவாரண பணிகளை முழுமையாக செய்யவில்லை. ‘மிக்ஜாம்' புயல் பாதிப்பு நிவாரணத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.