தமிழகம்

முதுமலையில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு நிவாரணம் கோரி பழங்குடியினர் உண்ணாவிரதம்

செய்திப்பிரிவு

கூடலூர்: முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சட்ட விரோதமாக வெளியேற்றப்பட்ட பழங்குடியின மக்களுக்கு உரிய நிவாரணம், சட்ட நடவடிக்கை மற்றும் உரிமைகளை நிலை நாட்ட வலியுறுத்தி, கூடலூரில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

கூடலூர் காந்தி திடலில் நடைபெற்ற போராட்டத்துக்கு, தமிழ்நாடு பழங்குடியின மக்கள் சங்கம் சார்பில், அதன் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். சிபிஐ ஒன்றியச் செயலாளர் முகமது கனி தொடங்கி வைத்தார். பழங்குடியின மக்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனர். இதற்கான ஏற்பாடுகளை சிபிஐ மாநில குழு உறுப்பினர்கள் வி.பி.குணசேகரன், மகேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.

முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சட்ட விரோதமாக வெளியேற்றப்பட்ட புலியாயும், மண்டக்கரை, நெல்லிக்கரை, முதுகுளி, பெண்ணை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த காட்டு நாயக்கர், பனியர், பெட்ட குரும்பர், இருளர், பழங்குடியின மக்கள் மற்றும் மவுண்டாடன் செட்டி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும். பழங்குடியின மக்களுக்கு வழங்கிய நிவாரணத் தொகையில் முறைகேடு செய்து ஏமாற்றிய வனத்துறை ஊழியர்கள், வழக்கறிஞர்கள், இடைத்தரகர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து குக்கிராமங்களிலும் வன உரிமைச் சட்டம் 2006-ன் கீழ் அனைத்து வன உரிமைகளை அங்கீகரித்து, வனத்தில் வசிக்கும் பழங்குடியினர் மற்றும் பிற பாரம்பரிய வனம் சார்ந்து வாழ்பவர்களின் வன உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும். வன உரிமை சட்டம் பிரிவு 3-ன் கீழ் அனைத்து தனி மனித, சமுதாய வன உரிமைகள், வன வள ஆதார உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு, அவற்றின் பண மதிப்பு நிர்ணயிக்கப்பட்டு இடம்பெயர்ந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

பழங்குடியின மக்கள் அனைவரையும் பழங்குடியின நல வாரியத்தில் உறுப்பினராக்க வேண்டும். கூடலூர் பந்தலூர் வருவாய் வட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழ்ந்து வரும் காட்டுநாயக்கர், பனியர், இருளர், பெட்டகுரும்பர், முள்ளு குரும்பர், மலைசார் பழங்குடியின மக்களுக்கு மின்சாரம், குடிநீர், வீட்டுமனை பட்டா, வீடு, சாலை, வேலை வாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். கட்டுமானத் தொழிலாளர் சங்க நிர்வாகி குணசேகரன் நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT