தமிழகம்

காமன்வெல்த்தில் தங்கம் வென்ற தமிழக வீரருக்கு ரூ.50 லட்சம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

செய்திப்பிரிவு

காமன்வெல்த் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் சதீஷ், பளுதூக்குதலில் புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். அவருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆடவர் 77 கிலோ எடைப் பிரிவு பளுதூக்குதலில் சதீஷ் மொத்தம் 328 கிலோ (ஸ்னாட்ச் பிரிவில் 149 கிலோ, கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 179 கிலோ) எடையைத் தூக்கி தங்கப் பதக்கத்தை வென்றார்.

22 வயதாகும் சதீஷ், ஸ்னாட்ச் பிரிவில் 149 கிலோ எடையைத் தூக்கியதன் மூலம் புதிய காமன்வெல்த் சாதனையையும் படைத்தார்.

சதீஷின் சாதனையைப் பாராட்டி அவருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சதீஷுக்கு, முதல்வர் ஜெயலலிதா திங்கள் கிழமை அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்றது மட்டுமின்றி, காமன்வெல்த் போட்டியில் சாதனை அளவில் பளு தூக்கி இருப்பதன் மூலம் தமிழகத்துக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளீர்கள். இந்த மகத்தான வெற்றிக்கு தமிழக மக்கள் சார்பில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் பங்கேற்ற முதல் சர்வதேச போட்டியிலேயே தங்கப் பதக்கத்தை வென்றிருப்பது மெச்சத்தக்கதாகும்.

காமன்வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றால் விளை யாட்டு வீரர்களுக்கு அளிக்கப்படும் ரொக்கப் பரிசை ரூ.50 லட்சமாக உயர்த்தி நான் கடந்த 2011 டிசம்பரில் வெளியிட்ட அறிவிப்பை தாங்கள் அறிந்திருப்பீர்கள். அதன்படி, தங்களுக்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப் படும். இந்த வெற்றிக்காக தங்களுக் கும், தங்களுக்கு துணை நின்றவர் களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, தமிழகத்துக்கும், நாட்டுக்கும் மேலும் பல பெருமைகளை பெற்றுத் தர வாழ்த்துகிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

தங்கப் பதக்கம் வென்ற சதீஷ், வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி யைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை சிவலிங்கம் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். தற்போது வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். இவரும் முன்னாள் பளுதூக்குதல் வீரர் ஆவார். தாய் தெய்வானை. சகோதரர் பிரதீப் குமார் கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்தப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற மற்றொரு இந்தியரான ரவி கதுலு மொத்தம் 317 கிலோ (142+175) எடையைத் தூக்கினார். இவர் கடந்த காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் ஆவார்.

SCROLL FOR NEXT