தமிழகம்

மக்களவைத் தேர்தலில் துரை வைகோ போட்டியா? - நிர்வாகிகள் விரும்புவதாக வைகோ தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: மக்களவைத் தேர்தலில் துரை வைகோ போட்டியிட வேண்டும் என நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டம் அவைத் தலைவர் அர்ஜூனராஜ் தலைமையில் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ, துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, ஏ.கே.மணி, ஆடுதுறை முருகன், தி.மு.ராஜேந்திரன், ரொஹையா உட்பட 145 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது: மதிமுக போட்டியிடும் தொகுதி குறித்து பேசவில்லை. பொதுவாக தேர்தல் குறித்து பேசினோம். பெரும்பாலான உறுப்பினர்கள் முதன்மைச் செயலர் துரை வைகோ போட்டியிட வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் அதற்கு நான் பதிலளிக்கவில்லை. அவரும் அதுகுறித்து பேசவில்லை. தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள், மக்கள் பிரச்சினைகளை கையிலெடுத்து ஆர்ப்பாட்டங்கள், அறப்போராட்டங்கள் நடத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி முகவர்கள் நியமிக்கும் பணியை ஒரு வார காலத்துக்குள் முடிப்பதாக மாவட்டச் செயலாளர்கள் உறுதியளித்துள்ளனர். தேர்தல் நிதியை பிப்ரவரி 10-ம் தேதிக்குள் திரட்டித் தர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புயல் பாதிப்பை ஈடுசெய்ய மத்திய அரசு போதிய நிதியளிக்க வேண்டும். திமுகவுக்கு மக்கள் ஆதரவு முழுமையாக உள்ளது. மத்திய அரசை எதிர்பார்க்காமல் மாநில அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இண்டியா கூட்டணியில் அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர். இவ்வாறு வைகோ தெரிவித்தார்.

இந்த நிர்வாகக் குழு கூட்டத்தில், தமிழக அரசு கோரிய பேரிடர் நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். ஜவுளித் தொழில் நெருக்கடிகளைக் களைய மத்திய, மாநில அரசுகளும், குறுசிறு தொழில் நிறுவன சிக்கல்களைக் களைய தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராஃபைட் உள்ளிட்ட கனிம வளங்களை எடுக்க தமிழகத்தில் மின் ஏலம் கோரும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். பட்டியலின மக்கள் மீதான தாக்குதலைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT