சிவகங்கை மாவட்டம் நடராஜபுரத்தில் நடைபெற்ற வடமஞ்சுவிரட்டில் வீரரை முட்டித் தூக்கிய காளை. 
தமிழகம்

தமிழகத்திலேயே முதல்முறையாக ஒரே இடத்தில் இரு மைதானங்களில் வடமஞ்சுவிரட்டு: காளை முட்டியதில் மாடுபிடி வீரர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

காரைக்குடி: தமிழகத்திலேயே முதல்முறையாக சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே ஒரே இடத்தில் இரு மைதானங்களில் வடமஞ்சுவிரட்டு (கயிறு கட்டி) நடைபெற்றது. இதில், காளை முட்டியதில் மாடுபிடி வீரர் ஒருவர் உயிரிழந்தார். தமிழகத்தில் இதுவரை ஒரே இடத்தில் ஒரே ஒரு வடமஞ்சுவிரட்டு மட்டுமே நடைபெற்று வந்தது. இந்நிலையில், தமிழகத்திலேயே முதல்முறையாக சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகேயுள்ள நடராஜபுரத்தில் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் 2 மைதானங்களில் வடமஞ்சுவிரட்டு நடைபெற்றது. தமிழ்நாடு வடமாடு நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த வடமஞ்சுவிரட்டில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 32 காளைகள் பங்கேற்றன. ஒரு காளைக்கு 9 பேர் வீதம் 288 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர்.

காளையை 25 நிமிடத்தில் அடக்க வேண்டும். இதில் 22 காளைகளை வீரர்கள் அடக்கினர். மாடுகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில்2 பேர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அல்லூரைச் சேர்ந்த பிரேம்குமார் (25) உயிரிழந்தார். இதுகுறித்து கல்லல் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT