தமிழகம்

முதல்வர், தலைமைச் செயலர் மீது புதுவை ஆளுநர் கடும் குற்றச்சாட்டு: கொறடாவுடன் நேருக்கு நேர் வாக்குவாதம்

செய்திப்பிரிவு

புதுச்சேரி முதல்வர், தலைமைச் செயலர் ஆகியோர் மீது, பதவி நீக்கப்பட்ட ஆளுநர் வீரேந்திர கட்டாரியா கடுமையான குற்றச் சாட்டுகளை கூறியுள்ளார். செய்தி யாளர் சந்திப்பின்போது ஆளுந ருடன் அரசு கொறடா நேருக்குநேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஆளுநர் மாளிகையில் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 11-ம் தேதி பதவி நீக்கப்பட்ட புதுவை துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா செவ்வாய்க்கிழமை செய்தியாளர் களிடம் பேசியதாவது:

‘ஆளுநர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஆணை வந்ததும் 13-ம் தேதியே ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியேறுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்த தாக புதுவை தலைமைச் செயலர் சேட்டன் பி சாங்கி கூறினார். மத்திய உள்துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டு நான் பேசிய போது, 17-ம் தேதி வரை தங்கலாம் என்று கூறப்பட்டது. எனது நீக்கத் துக்கு புதுச்சேரி அரசின் நெருக் கடியே காரணம். கொள்ளையடிப் பதே புதுவை அரசின் தாரக மந்திர மாக உள்ளது. அதில் என்னையும் கூட்டு சேர்க்க பார்த்தனர். தலைமைச் செயலரும் என்னிடம் இது குறித்து பேசினார். அவரை நான் எச்சரித்து அனுப்பிவிட்டேன். முதல்வருக்கும் தலைமைச் செயலருக்கும் நான் இடைஞ்சலாக இருந்தேன். இதுகுறித்து, நான் புறப்படும் முன்பு விரிவாக பத்திரிகையாளர்களிடம் தெரிவிப்பேன்” இவ்வாறு வீரேந்திர கட்டாரியா குறிப்பிட்டார்.

சங்கரராமன் கொலை வழக்கு

சங்கரராமன் கொலை வழக்கில் மேல் முறையீடு செய்ய அனுமதி அளித்ததே பதவி நீக்கத்துக்கு காரணமா என்று கேட்டபோது, அது தொடர்பான கோப்புகளை செய்தியாளர்களிடம் வீரேந்திர கட்டாரியா காண்பித்துவிட்டு அவர் கூறியதாவது: “எனக்கு வந்த கோப்பில் சங்கராச்சாரியார் தொடர்பான வழக்கு என்று குறிப்பிடாமல், வெறுமனே கொலை வழக்கில் மேல் முறையீடு செய்ய இருப்பதாக இருந்தது. அந்த கோப்பில் முதல்வர், தலைமைச் செயலர் மற்றும் சட்டத் துறையினர் கையெழுத்து போட்டிருந்ததால், நானும் கையெழுத்திட வேண்டி யது கட்டாயமாகிவிட்டது. இந்த விஷயத்தில் நான் வசமாக சிக்க வைக்கப்பட்டுள்ளேன். தனிப்பட்ட முறையில் கூறுவதாக இருந்தால் அரசியல்ரீதியான காரணங்களுக் காக வழக்கில் சங்கராச்சாரியார் சிக்க வைக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவித்தார்.

அரசு கொறடா வாக்குவாதம்

ஆளுநர் பேட்டி அளித்துக் கொண்டிருந்தபோது, ரங்கசாமி கட்சியைச் சேர்ந்தவரானஅரசு கொறடா நேரு ஆளுநர் அறைக்கு வந்து, “ஆளுநர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் எப்படி பேட்டியளிக்கலாம்?’ என கோஷமிட்டார். உடனே, பாதுகாப்பு அதிகாரிகள் நேருவை அழைத்துச் சென்றனர்.

ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்ட நேரு, "அரசியல்வாதி போல ஆளுநர் செயல்படுகிறார். அவருடைய தலையீடு அதிகமாக உள்ளது. மரபுகளை கடைப்பிடிப்பது இல்லை. இதுதான் அனைத்துக்கும் பிரச்சினை" என செய்தியாளர்களிடம் கூறிச் சென்றார்

SCROLL FOR NEXT