வானதி சீனிவாசன் 
தமிழகம்

"மிக்ஜாம்" நிவாரண தொகையை மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்துங்கள்: வானதி சீனிவாசன்

செய்திப்பிரிவு

கோவை: 'மிக்ஜாம்' புயல் பாதிப்பு நிவாரண தொகையை மக்களின் வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக கோவையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னையில் ‘மிக்ஜாம்' புயலுக்கு பிறகு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புயல் பாதித்த மக்களுக்கு நிவாரண தொகையாக ரூ.6 ஆயிரம் வழங்குவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த தொகையை ரேஷன் கடைகளில் ரொக்கமாக வழங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.

ஏழை மக்களை திரும்பவும் தெருவில் நிறுத்தாமல், டோக்கன் வழங்குகிறோம் என்ற பெயரில் இன்னும் கொடுமைப்படுத்தாமல், அவர்களின் வங்கிக் கணக்கில் பணத்தை நேரடியாக செலுத்த வேண்டும். இதனால் ரேஷன் கடை ஊழியர்களின் நேரம் மிச்சமாகும். மேலும், எளிதாக, எந்த செலவும் இல்லாமல், அரசு ஊழியர்களுக்கு எந்த பாரமும் இல்லாமல், ஆளுங்கட்சி நிர்வாகிகளின் தொந்தரவு இல்லாமல் ஏழை மக்களுக்கு இந்த பணம் போய் சேரும்.

முதல்வர் இந்த கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும். திமுக அரசு பொறுப் பேற்றதற்கு பிறகு மழைநீர் வெள்ள வடிகாலுக்கு என்று தனியாக ஒரு குழு அமைத்து இருந்தது. அந்த குழு அமைத்ததற்கு பிறகும் கூட நிலைமை இவ்வாறு இருக்கிறது என்றால் மாநில அரசு எவ்வாறு இயங்கிக் கொண்டு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT