மேட்டுப்பாளையம்: சென்னையை சிங்கப்பூராக்கி கூவத்தில் படகு ஓட்டுவோம் எனக் கூறியவர்கள் இன்று சென்னையையே கூவமாக மாற்றி விட்டார்கள் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பொன் விழா நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தனது முகாம் அலுவலகத்தை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நேற்று திறந்து வைத்தார். அங்கிருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதன் பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக மற்றும் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஊழல் கட்சிகள். நாட்டு மக்களின் நலன் சார்ந்த திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் சுய லாபத்துக்காக ஊழல் செய்தவர்கள்.
திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகளின் ஊழல்களை அடுத்தடுத்து பாஜக மக்களின் பார்வைக்கு கொண்டு வருகிறது. இக்கட்சிகளை சேர்ந்த அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களிடம் இருந்து ஊழல் செய்த பல கோடி ரூபாய் சட்டப்படி பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
சென்னை வெள்ளத்தை பொறுத்தவரை திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையோ அல்லது பாதிப்புக்கு பிறகு மீட்பு நடவடிக்கைகளிலோ முறையாக செயல்படவில்லை. மழை நீர் வடிகால் திட்ட பணிக்கு ஒதுக்கிய ரூ.4 ஆயிரம் கோடி செலவு செய்ததாக கூறிய நிலையில் தற்போது தமிழகத்தைச் சேர்ந்த துறை சார்ந்த அமைச்சர் ரூ.1,800 கோடி செலவு செய்துள்ளதாக கூறுகிறார். எனவே, இவ்விஷயத்தில் உண்மை வெளி வர வேண்டும்.
சென்னையை சிங்கப்பூராக மாற்றுவோம், கூவத்தில் படகு ஓட்டுவோம் எனக் கூறியவர்கள் இன்று நிர்வாக திறனின்றி சென்னையையே கூவமாக மாற்றிவிட்டார்கள். மத்திய குழு ஆய்வுக்கு பின் மத்திய அரசு தமிழகத்துக்கு மழை பாதிப்புக்கான நிவாரண தொகையை வழங்கும். தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மீனவர்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு நிரந்தர தீர்வு காண இரு தரப்பும் இணைந்து உயர்மட்ட குழு அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.