தமிழகம்

புயல் பாதித்த மாவட்டங்களில் நோய் தொற்றுகளை தடுக்க சிறப்பு அலுவலர்கள்

செய்திப்பிரிவு

சென்னை: மிக்ஜாம் புயல் பாதித்த மாவட்டங்களில் நோய்த் தொற்றுகளைத் தடுக்க சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புயலால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல இடங்களில் வெள்ளம் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், மழை நீர் தேங்கிய இடங்களில் நோய்க் கிருமிகள் பரவுவதைத் தடுக்க பொது சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, இந்நிலையில், புயல் பாதித்த மாவட்டங்களில் நோய்த் தொற்றுகளைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளை கண்காணிக்க சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, சென்னையில் மண்டல வாரியாகவும், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு பகுதி வாரியாகவும் அலுவலர்களை பொது சுகாதாரத் துறை நியமித்துள்ளது. அவர்கள் அனைவரும் சுகாதாரத் துறை இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் நிலையிலான அதிகாரிகள் ஆவர். 4 மாவட்டங்களிலும் நடத்தப்பட்டுவரும் மருத்துவ முகாம்களையும், கொசு ஒழிப்பு பணிகளையும் அவர்கள் கண்காணிப்பார்கள். அவர்கள் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை நேரடி கள ஆய்வு நடத்தி வழிகாட்டுதல்களை வழங்குவர் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT