தமிழகம்

தமிழகத்தில் மார்ச் 1 முதல் ஸ்மார்ட் அட்டை மூலமாக ரேஷன் பொருள் விநியோகம்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் மார்ச் 1-ம் தேதி முதல் ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் மூலமாகவே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.

இதுகுறித்து சென்னையில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

தமிழகத்தில் 1 கோடியே 94 லட்சத்து 47 ஆயிரம் குடும்ப அட்டைகள் உள்ளன. அதில், 1 கோடியே 93 லட்சம் குடும்பங்களுக்கு ஸ்மார்ட் அட்டைகள் பதிவு செய்யப்பட்டு, கடைகளுக்கு சென்றுவிட்டன. இவற்றில், 1 கோடியே 89 லட்சம் அட்டைகள் ‘ஆக்டிவேட்’ செய்யப்பட்டு நடைமுறைக்கு வந்துவிட்டன. 4 லட்சம் அட்டைகள் நடைமுறைக்கு வர தயார் நிலையில் உள்ளன. 1 லட்சத்து 47 ஆயிரம் அட்டைகள் இன்னும் அச்சிடப்பட வேண்டியுள்ளது.

மார்ச் 1-ம் தேதிக்குள் அனைத்து குடும்ப அட்டைகளும் ஸ்மார்ட் அட்டைகளாக மாற்றப்பட்டுவிடும் என்று தெரிகிறது. எனவே, மார்ச் 1-ம் தேதி முதல் அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு மூலமாகவே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.

அதிக வருவாய் பெறுபவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என்று ஊடகங்களில் வந்த தகவல் முற்றிலும் தவறானது. பழைய நடைமுறை அப்படியே பின்பற்றப்படும். அதில் எந்த மாற்றமும் இருக்காது.

இவ்வாறு அமைச்சர் காமராஜ் கூறினார்.

SCROLL FOR NEXT