சென்னை: அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 16 வயது சிறுமி உயிரிழந்தார்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக சார்பில், நலத்திட்ட உதவிகள் நேற்று வழங்கப்பட்டன. இதனை கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி வழங்கினார்.அதன்படி, முதல்கட்டமாக காலை 10 மணிக்கு துறைமுகம் தொகுதிக்குட்பட்ட ராஜாஜி சாலையில் உள்ள ராயபுரம் மனோ அலுவலகம் அருகில் நிவாரணங்களை வழங்கினார்.
இதையடுத்து, 2-ம் கட்டமாக ஆர்.கே.நகரில் தொகுதியில் நிவாரண பொருட்களைப் வழங்கி னார். அதன் படி, கொருக்குப்பேட்டை காவல் நிலையம் அருகே உள்ள பகுதிகளை பழனிசாமி பார்வையிட்டு, பின்னர் சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி கொண்டிருந்தார். அப்போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோ அங்கு கூடினர்.
நிவாரணப் பொருட்களை வாங்குவதற்காக ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு சென்றனர். கூட்ட நெரிசலும் ஏற்பட்டது. இந்நிலையில், திடீரென கூட்டத்தில், ஒரு சிறுமி வாயில் ரத்தத்துடன் கீழே மயங்கி நிலையில் விழுந்து கிடந்தார். இதைக்கண்ட போலீஸார் அச்சிறுமியை மீட்டு அங்கு, அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சேர்த்தனர்.
பின்னர், அங்கிருந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிறுமியை கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். விசாரணையில், அந்த சிறுமி தண்டையார் பேட்டை கருணாநிதி 3-வது தெருவை சேர்ந்த, மாநகராட்சி தூய்மை பணியாளர் வேலுஎன்பவரின் மகள் யுவஸ்ரீ (16) என்பது தெரியவந்தது.
அவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். மழையால் அவரது வீடு பாதிக்கப்பட்டதையடுத்து, நிவாரண பொருட்களை பெறுவதற்கு அவரது அத்தையுடன், அதிமுக சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு வந்திருந்த போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிவாரண பொருட்கள் வாங்க சென்ற இடத்தில் நெரிசலில் சிக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.