தாம்பரம்: மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்பால் மக்கள் பால் பாக்கெட் கிடைக்காமல் அவுதியுற்ற நிலையில், தாம்பரம் கால்வாயில் ஆயிரக் கணக்கான ஆவின் பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் மாநகராட்சி 33-வது வார்டு வைகை நகர் பகுதியில் கால்வாய் மற்றும் முட்புதர் பகுதியில் குளக்கரைக்கு பின் புற கால்வாயில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்டிருந்தன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்க தாம்பரம் மாநகராட்சிக்கு ஆவின் நிர்வாகம் பால் வழங்கியதாகவும் ஆனால் மாநகராட்சி நிர்வாகம் நேரடியாக பொதுமக்களுக்கு வழங்காமல் திமுக-வினரிடம் வழங்கியதாகவும், திமுகவினர் சரியாக விநியோகம் செய்யாததால் பால் கெட்டு விட்டதாகவும், அதனால் அந்த பாலை கால்வாயில் கொட்டி உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஆவின் விளக்கம்: இது தொடர்பாக ஆவின் நிறுவனம் அளித்த விளக்கம்: கடந்த 4-ம் தேதி மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி மின்சாரம் தடைப்பட்டது. எனவே தாம்பரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பல பால் விற்பனை நிலையங்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகள் மூடப்பட்டன.
சில இடங்களில் பொது மக்களுக்கு பால் விற்பனை செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. அவற்றை, சில சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் வியாபாரிகள் அங்கே கொட்டிவிட்டு சென்றதாக தெரிய வருகிறது. ஆவின் பால் பாக்கெட்டுகள் வீணாக கால்வாயில் கொட்டப்பட்டது என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.