தமிழகம்

கரும்புக்கு ஊக்கத் தொகையை அரசு அறிவிக்குமா?

எஸ். நீலவண்ணன்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் முக்கிய தொழில் விவசாயம். இம்மாவட்டத்தில் தொழிற்சாலையே கிடையாது. நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர் வகைகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.

2023 மார்ச் மாத கணக்கெடுப்பின்படி விழுப்புரம் மாவட்டத்தில் 15,383 ஹெக்டேரில் கரும்பு சாகுபடிசெய்யப்பட்டுள்ளது. அரசு சார்பில் ஒரு டன் கரும்புக்கு கொள்முதல் விலையாக ரூ.2,919 வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 2016-17-ம் ஆண்டு வரை மாநில அரசு சார்பில், கரும்புக்கு கூடுதல் பரிந்துரை விலை அறிவிக்கும் முறை கடைபிடிக்கப்பட்டு வந்தது. முந்தைய அதிமுக ஆட்சியில் இது ரத்து செய்யப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் மீண்டும் இது நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இதுவரை இதை செயல்படுத்தவில்லை. வழக்கமாக ஒரு டன் கரும்பு ரூ.195 ஊக்கத் தொகை வழங்கப்படும். நடப்பாண்டுக்கு இந்த ஊக்கத்தொகையை இன்னும் அறிவிக்கவில்லை. இதனால் மத்திய அரசு அறிவித்த, ஒரு டன் கரும்புக்கு குறைந்தபட்ச விலையான ரூ.2,919-ஐ தான் தமிழ்நாட்டில் கரும்பு கொள்முதல் விலையாக வழங்கப்படுகிறது. கரும்புக்கான உற்பத்தி செலவு குறித்து முண்டியம்பாக்கம், செஞ்சி செம்மேடு ஆலைகளின் கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பாண்டியன், பொதுச் செயலாளர் ஆறுமுகம் ஆகியோரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:

ஒரு ஏக்கரில் கரும்பு பயிரிட ரூ. 85 ஆயிரம் செலவாகிறது. ஒரு ஏக்கருக்கு சுமார் 32 டன் கரும்பு விளைச்சல் கிடைக்கும். அரசு அறிவித்த கொள்முதல் விலை ரூ. 2,919 என்ற அடிப்படையில் இந்த 32 டன்னை கணக்கிட்டால் ஏக்கருக்கு சுமார் ரூ. 93 ஆயிரம் கிடைக்கும். இதில் உற்பத்தி செலவுபோக ஏக்கருக்கு ரூ. 8 ஆயிரம் மட்டுமே லாபமாக கிடைக்கும். இதனால் படிப்படியாக கரும்பு பயிரிடும் பரப்பளவு குறைந்து வருகிறது.

நாங்கள் உற்பத்தி செய்யும் கரும்பில் இருந்துதான் மெத்தனால் தயாரிக்கப்பட்டு, அதன் மூலம் மது தயாரிக்கப்பட்டு டாஸ்மாக் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. எனவே மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் ஒரு டன் கரும்புக்கு குறைந்த பட்சம் ரூ.850 ஊக்கத் தொகை வழங்க வேண்டும். 2023 - 24-ம் ஆண்டுக்கான கரும்பு ஊக்கத் தொகையை அறிவிக்காவிட்டால், கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகள் எண்ணிக்கை மேலும் குறைந்து விடும் என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT