சென்னை: புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள கடும் சேதத்தை சரி செய்ய இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்க வேண்டும் என கேட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
வங்கக் கடலில் உருவான ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த 3, 4-ம் தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதனால், பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. மக்கள் வெளியில் வரமுடியாமல் தவித்து வருகின்றனர். பால், உணவுபொருட்கள் கிடைக்காமல் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், வெள்ள நிவாரணப் பணிகளுக்காக உடனடியாக ரூ.5,060 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும் என கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தை, பிரதமர் நரேந்திர மோடியிடம் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வழங்குகிறார்.
அக்கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் டிச.2, 3 மற்றும் 4-ம் தேதிகளில் தாக்கிய ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக பெய்த வரலாறு காணாத பெருமழையால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் மிக அதிகமான மழைப்பொழிவை சந்தித்தன. இதன் காரணமாக, இந்த 4 மாவட்டங்களில், குறிப்பாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சாலைகள், பாலங்கள், பொது கட்டிடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன. மேலும், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்துக்கு, இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடியை உடனடியாக வழங்க வேண்டும். மேலும், கனமழை காரணமாக ஏற்பட்ட சேதங்களைக் கணக்கிடும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. முழுவிவரங்கள் சேகரிக்கப்பட்ட பின்னர், விரிவான சேத அறிக்கை தயார் செய்யப்பட்டு, கூடுதல் நிதி கோரப்படும். சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட மத்திய அரசின் குழுவை தமிழகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.
தன்னார்வலர்களுக்கு அழைப்பு: மிக்ஜாம் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவும் பணியில் அரசுடன் இணைந்து தனிநபர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: புயல் பாதிப்பு மீட்புப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள தன்னார்வலர்களும், பல்வேறு தொண்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்களும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அவர்களை ஒருங்கிணைத்து தேவைப்படும் இடங்களில் அனுப்பி வைப்பதற்கு ஏதுவாக ஒரு உதவி மையம் சென்னை, எழிலக வளாகத்தில் உள்ள மாநிலப் பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. நிவாரணப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள விருப்பமுள்ள தனிநபர்கள் மற்றும் தன்னார்வ குழுக்கள் அல்லது அமைப்புகள் தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களை இதற்கென நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களின் வாட்ஸ்அப் எண்களில் தொடர்பு கொண்டு தகவல் அனுப்பி, பதிவு செய்து கொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதன்படி, ஷேக் மன்சூர், உதவி ஆணையர் - 9791149789, பாபு, உதவி ஆணையர் -9445461712, சுப்புராஜ் உதவி ஆணையர் - 9894540669, பொது - 7397766651 ஆகிய எண்களில் பதிவு செய்யலாம். நிவாரணப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள பதிவு செய்யும் தனிநபர்கள், தன்னார்வலர்கள் மீட்புப் பணிகள் தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பாதிப்பு பகுதிகளில் ஆய்வு: இதற்கிடையே, வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2 நாட்களாக ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகிறார். அந்த வகையில் நேற்று காலை, சென்னை மாநகராட்சியின் கந்தன் சாவடி பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். இதையடுத்து, மாநகராட்சிக்குட்பட்ட தரமணி, பாரதி நகர் பகுதியிலும் முதல்வர் அத்தியாவசிய பொருட்களை பாதிக்கப்பட்டமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழச்சிதங்கப்பாண்டியன் எம்.பி. ஆகியோர் உடன் இருந்தனர். இதையடுத்து, நேப்பியர் பாலம் அருகில், கூவம் ஆற்றின் முகத்துவாரப்பகுதியில் வெள்ள நீர் சீராக வடிகிறதா என்பதை பார்வையிட்டார். அவருடன் தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து, நேற்று மாலை, கொளத்தூர் பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கி அரிசி, போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கினார். கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட ஓட்டேரியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை, போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். பின்னர், ஓட்டேரி, நல்லான் கால்வாயில் நீர்வரத்தினை பார்வையிட்டார்.
தொடர்ந்து, குக்ஸ் சாலை பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். மழைநீர் தேங்கிய பகுதியில் தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை படகுகளில் அனுப்பி வைத்தார்.
பின்னர், அகரம் - ஆனந்தன் பூங்கா, பாலாஜி நகர் பிரதான சாலை மற்றும் செல்வி நகர் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கிஅம்மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கினார்.
கொளத்தூரில் வெள்ள நிவாரணப்பணிகளை ஆய்வு செய்த முதல்வர், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு நீரை வெளியேற்றி, வெள்ளநீர் வடிந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு உடனடியாக மின்சாரம் வழங்கிட வேண்டுமென்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது, அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.